சரண் விடுப்பு சலுகையை 2026ல் வழங்குவது ஏன்? அமைச்சர் வேலு விளக்கம்
சென்னை: நிதியாண்டு முழுதும் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வந்தால், 15 நாட்களுக்கான சரண் விடுப்பு சலுகையை, 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம் என பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் சரண் விடுப்பு சலுகை, 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தாண்டு பட்ஜெட்டில் வரவேண்டிய அறிவிப்பு, இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவித்திருப்பது ஏன்?அமைச்சர் தங்கம் தென்னரசு: அதையேதான் நான் கேட்கிறேன். சரண் விடுப்பு சலுகையை உங்கள் ஆட்சியில் நிறுத்தியது ஏன்? கொரோனா காலத்தில், அரசாணை போட்டு நிறுத்தியது நீங்கள்தான். நீங்கள் நிறுத்திய பணியை, நாங்கள் மீண்டும் துவங்குகிறோம்.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: கடந்த 2021ம் ஆண்டு தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடுகின்றனர். தொடர் போராட்டம் நடக்கும் என அறிவித்துள்ளனர்.அமைச்சர் தங்கம் தென்னரசு: போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை முதல்வர் உத்தரவின்படி அழைத்து கோரிக்கைகளை பெற்றோம்.இதுகுறித்து முதல்வர், நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட சரண் விடுப்பு சலுகைக்கு மீண்டும் உயிர் ஊட்டும் வகையில், அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.எதிர்க்கட்சி தலைவர்: அரசு ஊழியர்கள் சரண் விடுப்பு சலுகை, தி.மு.க., ஆட்சியில்தான் நிறுத்தப்பட்டது. 2026 முதல் வழங்கப்படும் என, நீங்கள்தான் அறிவித்துள்ளீர்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு: நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில்தான் அது நிறுத்தப்பட்டது.அமைச்சர் வேலு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல், ஆண்டு முழுதும் பணிக்கு வந்தால், அதில், 15 நாட்களுக்கு உரிய ஊதியம் சரண் விடுப்பு சலுகையாக வழங்கப்படும்.இந்த சலுகை அ.தி.மு.க., ஆட்சியில்தான் நிறுத்தப்பட்டது. அது அரசு ஊழியர்களுக்கு நன்றாக தெரியும்.அதன்படி, வரும் நிதியாண்டு முழுதும் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வந்தால், 15 நாட்களுக்கான சரண் விடுப்பு சலுகையை, 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த ஆட்சிதான் இருக்கும். எனவே, இந்த ஆட்சியில்தான், சரண் விடுப்பு சலுகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறவுள்ளனர்.செல்லுார் ராஜு: அரசு ஊழியர்கள் உங்களுக்குதான் ஓட்டளித்தனர். ஆட்சிக்கு வந்த உடனே அவர்கள் கேட்ட சலுகைகளை வழங்கியிருக்கலாம். நான்கு ஆண்டுகள் போய் விட்டன.எனவே, இந்தாண்டே சலுகைகள் கொடுத்திருக்க வேண்டும். அடுத்தாண்டு தி.மு.க., ஆட்சிக்கு வரப்போவது கிடையாது.இவ்வாறு விவாதம் நடந்தது.