போலீஸ் துறை பணிகளுக்கு 21 ஆயிரம் பேர் ஆன்-லைனில் விண்ணப்பம்
புதுச்சேரி: போலீஸ் துறையில் நிரப்பப்பட உள்ள, 661 பணியிடங்களுக்கு, 21 ஆயிரத்து 414 பேர், ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரி போலீஸ் துறையில், ரிசர்வ் பட்டாலியன் பிரிவுக்கு, 211 கான்ஸ்டபிள்கள் (ஆண்கள்) புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், ஊர்காவல் படை யில், 450 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, புதுச்சேரி பகுதிக்கு 247, காரைக்காலுக்கு 29, மாகிக்கு 14, ஏனாமிற்கு 17 என, 307 ஆண்களும், புதுச்சேரிக்கு 103, காரைக்காலுக்கு 18, மாகிக்கு 13, ஏனாமிற்கு 9 என, 143 பெண்களும், ஊர்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் வெளியானது. அரசின் இணையதளத்தில், ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கு, கடந்த 10ம் தேதி, கடைசி நாளாகும். ரிசர்வ் பட்டாலியன் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு, 7059 பேர், ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். இதில், 689 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் என்பதால், வெளி மாநிலத்தவரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ஊர்காவல் படையில் 450 பணியிடங்களுக்கு, 14 ஆயிரத்து 355 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், ஆண்கள்-12 ஆயிரத்து 479;பெண்கள்-1876 பேர். ஆன்-லைன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களுடன், வரும் 20ம் தேதிக்குள், அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தபால் மூலமாக வருகின்ற விண்ணப்பங்கள், போலீஸ் தலைமையகத்தில் குவிந்து வருகிறது. ரிசர்வ் பட்டாலியன் கான்ஸ்டபிள், ஊர்காவல் படையினர் அனைவரும், உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது, மழைக்காலமாக உள்ளதால், உடல் தகுதி தேர்வை, வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்துக்கு பின் நடத்தலாமா என, போலீஸ் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். பெண் போலீஸ் 100 பேர் தேர்வு புதுச்சேரி போலீஸ் துறையில், 100 பெண் கான்ஸ்டபிள் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இவர்களுக்கும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக அனைவருக்கும், ஒரே நேரத்தில், உடல் தகுதி தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.