உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு 23 ல் கவுன்சிலிங் துவக்கம்

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், 23ம் தேதி துவங்குகிறது. சிறப்பு பிரிவினருக்கு நேரிலும், மற்றவர்களுக்கு ஆன்லைனிலும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பான, பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., மற்றும் உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பத்தில், பி.டெக்., படிப்புகள் உள்ளன.கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பில், 360 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 54 இடங்கள் போக, 306 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன.பி.டெக்., படிப்புகளில் உள்ள, 100 இடங்களில், ஆறு இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தாண்டு புதிதாக, சேலம் - தலைவாசல், தேனி - வீரபாண்டி, உடுமலைபேட்டையில், 40 இடங்களுடன் மூன்று கல்லுாரிகள் செயல்பட துவங்குகின்றன.இந்த படிப்புகளுக்கு, பிளஸ் 2 அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. படிப்புகளில் சேர, 15 ஆயிரத்து, 580 மாணவர்கள் விண்ணப்பித்தனர்; அதில், 13 ஆயிரத்து, 901 பேர், தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், வரும், 23ம் தேதி துவங்குகிறது. அன்று, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு, சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், கவுன்சிலிங் நடைபெறுகிறது.பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங், www.tanuvas.ac.in www2.tanuvas.ac.in என்ற பல்கலையின் இணையதளங்களில், ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் வரும், 24ம் தேதி காலை, 10:00 முதல், 28ம் தேதி காலை, 6:00 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.தகுதியான மாணவர்களுக்கு, கல்லுாரிகளில் சேர்வதற்கான ஆணை, இணையதளத்தில், 30ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும்.அந்த ஆணையை பதிவிறக்கம் செய்து, 2021 ஜன., 13 மாலை, 5:00 மணிக்குள், கல்லுாரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கான பதிவு, ஜன., 19ல் துவங்கும். கவுன்சிலிங் தொடர்பான விபரங்களுக்கு, பல்கலையின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்