உள்ளூர் செய்திகள்

பள்ளி வேன் கவிழ்ந்து 23 குழந்தைகள் காயம்

திருப்பூர்: திருப்பூரில், அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பள்ளி வேன், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது; காயமடைந்த, 23 குழந்தைகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர், விஜயாபுரத்தில் உள்ள, பாரதி வித்யாபவன் பள்ளிக்கு சொந்தமான, &'மஹிந்திரா&' வேன், நேற்று காலை, 23 குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. காலை, 8:55 மணியளவில், காங்கேயம் சாலையில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட, அப்பகுதி மக்கள், தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், குழந்தைகளை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் நல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில், 3 முதல், 12 வயதுடைய குழந்தைகள் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த, குழந்தைகளின் பெற்றோரும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில், தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால், சாலை தடுப்புகள் அமைக்க வலியுறுத்தி, திருப்பூர் - காங்கேயம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தை, கலெக்டர், டி.ஆர்.ஓ., உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். பின், மருத்துவமனைக்கு சென்று, குழந்தைகளை பார்த்து, ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்