ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 2500 பேர் தேர்வு
இவர்களுக்கு பிப்., 21ல் எழுத்து தேர்வு நடக்கிறது.தேனி மாவட்ட விளையாட்டரங்கில் ஜன., 5 முதல் 11 வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் தேனி, தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், சோல்ஜர் ஜெனரல் டூட்டி, டிரேட்ஸ்மேன், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு குறித்து கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் வர்க்கீஸ் கூறியதாவது: ஒரு வாரம் நடந்த ஆள் சேர்ப்பு முகாமில் 19 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 200 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கோவையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இதற்காக தனித்தனியாக அழைக்கப்படுவார்கள். மருத்துவ பரிசோதனைக்கு பின் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பிப்.,21 ல் கோவையில் எழுத்து தேர்வு நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.தேனி மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் காளியப்பன் உடன் ராணுவ அலுவலர்கள் ஆட்கள் தேர்வு முகாமில் கலந்துகொண்டனர்.