மருத்துவ கல்லூரி விதிமீறல்: ரூ.2.76 கோடி செலுத்த உத்தரவு
சென்னை: தேர்வுக் குழுவின் ஒதுக்கீடு உத்தரவு இன்றி மாணவர்களை சேர்த்த தனியார் மருத்துவக் கல்லுாரி, 2.76 கோடி ரூபாய் டெபாசிட் செலுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களை கல்லுாரியில் இருந்து விடுவிக்கும்படி எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏழு மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இம்மனுக்கள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன. மாணவர்கள் சேர்க்கைக்காக 45 லட்சம் முதல் 65 லட்சம் ரூபாய் வரை நன்கொடை வழங்கப்பட்டதாக பெற்றோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கல்லுாரி தரப்பில், கடைசி நாளில் ஒன்பது இடங்களும் காலியாக இருந்ததால், நீட் தேர்வில் 112 முதல் 290 மதிப்பெண்கள் வரை பெற்ற ஒன்பது பேர் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:காலியிடங்களில் ஒன்பது மாணவர்களையும் சேர்த்த வகையில் கல்லுாரி பின்பற்றிய முறை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும், விதிமுறைகளுக்கும் முரணானது. ஆனாலும் மனுதாரர்களை சேர்த்ததன் வாயிலாக முற்றிலுமாக தகுதியை புறக்கணித்து விடவில்லை. இரண்டு ஆண்டுகள் படிப்பை முடித்து விட்டதால், அவர்களை வெளியே அனுப்பினால், படிப்பு பாதிக்கப்படும். அதனால், கல்லுாரியில் படிப்பை மனுதாரர்கள் தொடரலாம். மனுதாரர்களில் ஆறு பேர் சார்பில் 2.76 கோடி ரூபாய் கல்லுாரிக்கு செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக் குழு செயலர், மருத்துவ பல்கலை பதிவாளர் பெயரில் தனியாக கூட்டுக் கணக்கை துவங்கி அதில் 2.76 கோடி ரூபாய் உடன் 6 சதவீத வட்டியும் சேர்த்து, டெபாசிட் செய்ய கல்லுாரி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த தொகையை, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கப்படும், தகுதி வாய்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு பயன்படுத்த வேண்டும். பெற்றோரிடம் இருந்து நன்கொடை பெறவில்லை என கல்லுாரி நிர்வாகம் கூறி பணத்தை டெபாசிட் செய்ய மறுத்தால் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு இதை அனுப்ப வேண்டும். விதிமுறைகளை மீறி மாணவர்களை சேர்த்ததால், கல்லுாரிக்கு எதிராக உரிய நடவடிக்கையை, பல்கலை எடுக்கலாம். ஒன்பது மாணவர்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஐந்து பேர் சேர்க்கப்பட்டதால், அந்த இடங்களை அரசுக்கு கல்லுாரி நிர்வாகம் ஒதுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.