அரசு தொடக்கப் பள்ளிக்கு 2.96 ஏக்கர் இடம் ஒதுக்கீடு
கும்மிடிப்பூண்டி: கிறிஸ்தவ தேவாலயத்திலும், பழைய அங்கன்வாடி கட்டடத்திலும், இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளிக்கு, 2.96 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே, சாணாபுதுார் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும், அதன்பின், பழுதடைந்த பழைய அங்கன்வாடி கட்டடத்திலும், இயங்கி வந்தது. அதில் பயிலும் 63 மாணவ, மாணவியரின் நலன் கருதி, பள்ளிக்கு என, தனியாக இடம் ஒதுக்கி, கட்டடம் கட்ட வேண்டும் என, பகுதிவாசிகள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக, பல போராட்டங்களை மேற்கொண்டனர். பகுதிவாசிகளின் கோரிக்கையை ஏற்ற அரசு, சாணாபுதுார் கிராமத்தில், சர்வே எண் 215/3ல், 2.96 ஏக்கர் தோப்பு புறம்போக்கு நிலத்தை தொடக்கப் பள்ளிக்கு ஒதுக்கி, பள்ளி கல்வித்துறைக்கு நில மாற்றம் செய்து, கடந்த 5ம் தேதி அரசு ஆணை வெளியிட்டது. தொடக்கப் பள்ளி நிறுவ, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஏற்கனவே 7.86 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் இரு வகுப்பறைகள் கொண்ட கட்டட பணிகள் துவங்கப்பட உள்ளன. இதனால் சாணாபுதுார் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.