வேளாண் பல்கலை சார்பில் 3 நாட்கள் மலர் கண்காட்சி
பொள்ளாச்சி: கோவையில், 10ஆண்டுகளுக்கு பிறகு, வேளாண் பல்கலை சார்பில் மலர் கண்காட்சி, இம்மாதம் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.வோளண்பல்கலையில் இறுதியாக, 2012 ஜன., மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. அதன்பின், பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. கடந்தாண்டு ஜூலையில் நடப்பதாக இருந்த மலர் கண்காட்சி, பருவநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, இம்மாதம் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் காலை, 9:00 முதல் மாலை 7:00 மணி வரை நடைபெறவுள்ளது.மலர் அலங்காரம், தீம் அடிப்படையில் உருவங்கள் வடிவமைப்பு, போன்சாய், உதிரி பூக்களில் ரங்கோலி என ஐந்து பிரிவுகளாக, கண்காட்சி பிரிக்கப்பட்டுள்ளது. இம்முறை, மூலிகை மற்றும் பாரம்பரிய தாவரங்கள், நர்சரி ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பங்களிப்பு இருக்கும் வகையில், ஆன்லைன் பதிவு வாயிலாக, வீட்டுத்தோட்டம் சார்ந்த சிறப்பு அம்சங்களும் இடம்பெறும். பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடக்கவுள்ளன.துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் கேட்டபோது, மலர் கண்காட்சியில் செடிகள், காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும். குடும்பத்துடன், பொழுதை கழிக்க சிறப்பான நிகழ்ச்சியாக இக்கண்காட்சி இருக்கும், என்றார்.