செங்கை தொடக்க பள்ளியில் 3,062 மாணவர் சேர்க்கை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடக்கப் பள்ளியில், 3,062 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக பள்ளிக்கல்வி துறை, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம், எதிர்காலத்தை வளமாக்குவோம் என்ற திட்டத்தின் கீழ், கடந்த 1ம் தேதி மாணவர்களை சேர்க்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 1ம் தேதியில் இருந்து, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லபாக்கம் ஆகிய வட்டாரங்கள் உள்ளன.இந்த வட்டாரங்களில், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் நடுநிலைப் பள்ளியில், முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை, கலெக்டர் அருண்ராஜ், கடந்த 8ம் தேதி துவக்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து, எட்டு வட்டாரங்களில் தொடக்கப் பள்ளியில், 1ம் வகுப்பில், 3,062 மாணவர்களும், இரண்டாம் வகுப்பில், 50 மாணவர்கள், மூன்றாம் வகுப்பில் 49 மாணவர்களும், நான்காம் வகுப்பில் 32 மாணவர்கள்.ஐந்தாம் வகுப்பில் 21 மாணவர்களும், ஆறாம் வகுப்பில் 31 மாணவர்களும், ஏழாம் வகுப்பில், 26 மாணவர்களும், எட்டாம் வகுப்பில், இரண்டு மாணவர்கள் என, 3,273 மாணவர்கள் பள்ளியில், கடந்த 15ம் தேதி வரை சேர்ந்துள்ளனர்.மாவட்டத்தில், மாணவர்கள் சேர்க்கும் பணியில், ஆசிரியர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.