எம்.எஸ்.எம்.இ., துறையில் 33,464 வேலை வாய்ப்பு: அமைச்சர் அன்பரசன் தகவல்
கோவை: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், எம்.எஸ்.எம்.இ., துறை சார்பில், ரூ.2,993 கோடி வங்கிக் கடன் வழங்கி, 33 ஆயிரத்து 464 இளைஞர்களை தொழில்முனைவோராக்கி, வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளோம் என குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.கோவை கொடிசியா வளாகத்தில், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற, வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், 15 நாடுகளைச் சேர்ந்த 28 கொள்முதலாளர்கள், 231 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 43 எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் 115 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டன.இதுதொடர்பாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன்செய்தியாளர் களிடம் கூறியதாவது:தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், எம்.எஸ்.எம்.இ., துறை சார்பில் 5 சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, ரூ.1,104 கோடி மானியத்தில், ரூ.2,993 கோடி வங்கிக்கடன் அளித்து, 33 ஆயிரத்து 464 இளைஞர்களை தொழில்முனைவோராக்கியுள்ளோம்.சேலம், சத்தி, கிருஷ்ணகிரி, ஓசூர், மதுரை, கோவையில் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் ரூ.208 கோடி மதிப்பில், 541 குறுந்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய அடுக்குமாடித் தொழில் வளாகம் கட்டும் பணி நடக்கிறது.புலம் பெயர் தொழிலாளர்களுக்காக, அம்பத்தூரில் 810 தொழிலாளர்கள் தங்க, ரூ.24.4 கோடியில் விடுதி கட்டப்படுகிறது. கோவை, குறிச்சியில், ரூ.22 கோடி மதிப்பில் 510 தொழிலாளர்கள் தங்க, விடுதி கட்டும் பணி நடக் கிறது.தென்னை நார் தொழிலை ஊக்குவிக்க, தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டுக் கழகம் துவக்கப்பட்டுள்ளது. தென்னை நார்த் தொழில், ரூ.2,156 கோடி ஏற்றுமதி உட்பட ஆண்டுக்கு ரூ.5,361 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.பேராவூரணி, கே.பரமத்தி, குண்டடம், உடுமலை, பொள்ளாச்சி கயிறு குழுமங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. தென்னை நார்பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்க ரூ.4 மதிப்பில் ஆய்வகம் அமைக்கப்படுகிறது.மின்கட்டணம்பீக் ஹவர் மின்கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் வரை, பீக் ஹவர் கட்டணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் கட்டணமும் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மின்வாரியத்துக்கு அரசு கடந்த ஆண்டு ரூ.330 கோடியும், நடப்பாண்டு ரூ.351 கோடியும் வழங்கியுள்ளது.12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு 3ஏ1 கட்டண விகிதத்துக்கு மாற்றுவது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில்துறை கூடுதல் கமிஷனர் சவுந்தர வல்லி, இணை கமிஷனர் நிர்மல்ராஜ், கலெக்டர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.