பஸ்சில் இடம் பிடிக்க ரிஸ்க் எடுக்கும் மாணவர்கள்
வடமதுரை: வடமதுரையில் பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லாததால் பஸ்களில் இடம் பிடிக்க வெகு துாரம் நடந்து சென்று முந்தைய பஸ் நிறுத்தத்தில் ஆபத்தாக காத்திருந்து பள்ளி மாணவர்கள் பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.வடமதுரை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். 9 வார்டுகள் குக்கிராமங்களிலும் மீதமுள்ள 6 நகர் பகுதியிலுமாக அமைந்துள்ளன. திண்டுக்கல்லில் இருந்து 17 கி.மீ., துாரத்தில் இருப்பதாலும் திருச்சி மார்க்கத்தில் செல்லும் விரைவு பஸ்களின் சேவை இரவு, பகல் தொடர்ந்து கிடைக்கிறது.இதனால் வடமதுரை நகர் திண்டுக்கல் மாநகராட்சிக்கு துணை நகர் போல்வளர்ச்சி கண்டு வருகிறது. இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் நாளுக்கு நாள் சிரமங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது.பஸ் ஸ்டாப் பகுதியில் கடை விஸ்தரிப்பு, டூவீலர்கள் ஆக்கிரமிப்பாக உள்ளதால் ரோடு குறுகலாக மக்களுக்கு இடையூறாக உள்ளது. பஸ் ஸ்டாப் பகுதியில் ரோடு விளிம்புகளிலும் டூவீலர்களை நிறுத்திவிட்டு செல்வோரால் பஸ் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். சில கடைக்காரர்கள் தங்கள் வியாபாரம் பாதிப்பதாக கூறி ரோட்டோரம் காத்திருக்கும் பயணிகளை விரட்டும் கொடுமையும் நடக்கிறது. வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ளது.இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பிய நிலையில் பல்வேறு நிலைகளில் ஏற்பட்ட தாமதத்தால் தடைப்பட்டு நிற்கிறது. இதை விரைவுப்படுத்த மக்கள் பிரதிநிதிகள் முன் வர வேண்டும். -வி.செல்வராஜ் நிர்வாகி மகாத்மா காந்தி கல்வி சமூக நல அறக்கட்டளை பாகாநத்தம்: பாதுகாப்பு இல்லை வடமதுரையில் பள்ளிகள் விடும் நேரங்களில் மாணவர்கள் ஒரே நேரத்தில் பஸ் ஸ்டாப் பகுதியில் குவிகின்றனர். அங்கு போதிய இடமில்லாததால் ரோடு விளிம்பில் பாதுகாப்பின்றி நிற்கின்றனர். மற்றவர்களுடன் நெருக்கடியில் ஆபத்தான முறையில் பஸ் ஏறும் நிலை உள்ளது. இதை தவிர்க்க ஏராளமான மாணவர்கள் திண்டுக்கல் ரோடு சந்திப்பு, திருச்சி ரோட்டில் மங்கம்மாள் கேணி, காணப்பாடி ரோட்டில் போலீஸ் நிலையம் என முந்தைய பஸ் நிறுத்தங்களுக்கே பிரிந்து சென்று நிற்கின்றனர். திண்டுக்கல் ரோடு சந்திப்பு பகுதிக்கு செல்லும் மாணவர்கள் பஸ் வரும் வகையில் அருகில் கிடக்கும் மரத்துண்டுகளின் மீது விளையாடுகின்றனர். அங்கு விஷப்பூச்சிகளாலும், தடுக்கி விழுந்து காயமடையும் ஆபத்தும் உள்ளது. இதோடு ஆபத்து மிக்க நான்கு வழி சாலை பகுதிகளிலும் உலா வருகின்றனர். - டி.சிக்கணன் இயற்கை விவசாயி -நடவடிக்கை அவசியம் 2016ல் எங்கள் அமைப்பு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு தந்தோம். இதனடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நத்தம் , வேடசந்துார் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2017ல் ஆக்கிரமிப்புகள் கணக்கீடு பணி நடந்து 2019 லோக்சபா தேர்தல், 2020 கொரோனா தொற்று பிரச்னைகளால் தாமதமாகி சில மாதங்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. பஸ் ஸ்டாப் பகுதியில் டூவீலர் ஆக்கிரமிப்பால் மாணவர்கள் பள்ளிவிட்டு திரும்பும் நேரத்தில் ஏற்படும் அவதிக்கு தீர்வு இல்லாமல் அதே அளவில் மீண்டும் தொடர்கிறது. இப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடந்தேறும் முன்னரே மாணவர்கள், பயணிகளை பாதுகாக்க அதிகாரிகள் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு நீண்ட காலமாக எந்த பயன்பாடுமின்றி காலியாகவே இருக்கும் கோயில் இடத்தை வடமதுரை பேரூராட்சி நிர்வாகம் குத்தகைக்கு பெற்று பஸ் ஸ்டாண்ட் அமைத்து குறிப்பிட்ட தொகையை வாடகையாக அறிநிலையத்துறைக்கு செலுத்தலாம். இதன் மூலம் கோயில் வளர்ச்சிக்காக நிலம் தந்தவர்களின் நோக்கம் தடைப்படாது. மற்றொரு வாய்ப்பாக அறநிலையத்துறையே பஸ் ஸ்டாண்ட் அமைத்து அதன் வருமானத்தை கோயிலுக்கு பயன்படுத்தலாம். பழைய போலீஸ் ஸ்டேஷன் இடத்தில் வேடசந்துார் செல்லும் பஸ்கள் நின்று செல்ல வசதி செய்யலாம். இதன் மூலம் வடமதுரையில் தற்போது காணப்படும் நெருக்கடி பெருமளவில் குறையும்.