உள்ளூர் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் கவுன்சிலிங்: 43 பேர் நியமனம்

கோவை: இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், கோவையில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக தொடக்க கல்வி இயக்குனர் தேவராஜன்  43 பேருக்கு நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார். குட்ஸ் ஷெட் ரோட்டில் உள்ள பிரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், “கோவை மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மொத்தம் 98 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கென ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த 46 பேருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்புக் கடிதம் அனுப்பியிருந்தது. அதன்படி இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 33 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் என, மொத்தம் 43 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது. இவர்களுக்கான அதிகாரபூர்வ நியமன உத்தரவு, டிச. 14ல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வழங்கப்படும். நியமன உத்தரவு பெற்றவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்கள், இரண்டு செட் சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றுடன் அன்றைய தினம் வர வேண்டும்,” என்றார். நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்ற தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன், தேர்வு பெற்றவர்களுக்கு நியமன ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “புதிதாக பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் முழு அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அனைவருக்கும் ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஏ.பி.எல்., கல்வி பயிற்சி அளிக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்