மஞ்சள் கோடு வளையத்தில் 54 கல்வி நிறுவனங்கள்
கோவை: கோவை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில், 54 கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் டாக்டர் சரண்யா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுபோன்ற பழக்கம், சக நண்பர்களிடம் இருந்தாலும் தகவல் அளிப்பது, அவர்களின் எதிர்காலத்துக்கு சிறந்தது என்பதை அறிவுறுத்தியுள்ளோம்.மஞ்சள் கோடு எனும் விற்பனைத்தடை வளையத்திற்குள், 54 கல்வி நிறுவனங்களை கொண்டு வந்துள்ளோம். தனியார் பள்ளிகளில், அவர்களே இதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். கோவையில், 2,059 பள்ளிகள், 189 கல்லுாரிகள் உள்ளன. இவை அனைத்திலும் விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படும், என்றார்.