ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி: 57 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
திருப்பூர்: ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி மையத்தில், இலவசமாக பயிற்சி பெற்ற, 57 பேருக்கு, பட்டமளிப்பு விழா நடந்தது.ரிவைவிங் கிரீன் ரெவல்யூஷன், டாடா அறக்கட்டளை மற்றும் இன்டர்டெக் நிறுவனம் சார்பில், ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி மையம், திருப்பூரில் இயங்கி வருகிறது. ஜவுளி சோதனை மற்றும் தர உத்தரவாதத் துறையில், திறன் இடைவெளியை குறைக்கும் வகையில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜவுளி தொழில்நுட்ப பயிற்சி மையத்தில், ஜவுளி லேப் டெக்னீஷியன் மற்றும் மெர்சன்டைசிங் பயிற்சிகள், 2022 ஜூலை மாதம் முதல் அளிக்கப்படுகிறது.பயிற்சியை நிறைவு செய்த, 57 மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் விழா, திருப்பூர் மையத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கர், உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.பயிற்சி நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டினர். இன்டர்டெக் நிறுவன துணை பொது மேலாளர் ஜெயபால், துணை பொது மேலாளர், மனிதவள மேம்பாட்டு அலுவலர் இம்ரான்கான், தணிக்கை பிரிவு தலைவர் சாந்தகுமார், பயிற்சியாளர் செல்வம் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.முன்னதாக பயிற்சி சேவை நிறுவன திட்ட மேலாளர் அருள்துரை வரவேற்றார். மூத்த பயிற்சியாளர் ஜான் உட்பட பலர் பங்கேற்றனர். இலவச பயிற்சி பெற விரும்புவோர், ஜான் (98421 88608), ரேவதி (80151 68367) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மையம் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.