பி.எட்., நுழைவு தேர்வு 644 பேர் எழுதினர்
கோவை: பாரதியார் பல்கலையின் தொலைமுறைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு நடந்தது. தமிழகம் முழுவதும், 644 பேர் எழுதினர். பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்வி முறையில், இரண்டாண்டு பி.எட்., படிப்பும், முழு நேரமாக எம்.எட்., படிப்பும் வழங்கப்படுகிறது. பி.எட்., படிப்புக்கு, கடந்தாண்டு டிசம்பர் முதல், கடந்த மார்ச் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. நுழைவு தேர்வு, சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய நான்கு மையங்களில் நேற்று நடந்தது. காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த தேர்வை, 644 பேர் எழுதினர்; 241 பேர் எழுதவில்லை. தேர்ச்சி பெறுபவர்களுக்கு, விரைவில் மாணவர் சேர்க்கை நடக்கவுள்ளது.