உள்ளூர் செய்திகள்

‘சைபர்’ பாதுகாப்பு மாநாட்டில் 8 வயது சிறுவன் உரை

புதுடில்லி: ’சைபர்’ பாதுகாப்பு மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில், அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன், இன்று உரை நிகழ்த்த உள்ளான். மற்றவர்களின் அல்லது நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி, தகவல்களை திருடுவது மற்றும் வைரஸ்களை ஏவி விட்டு, தகவல்களை அழிப்பது போன்றவற்றை தடுப்பது தொடர்பான, சைபர் பாதுகாப்பு மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. மாநாட்டின் இன்றைய நிகழ்ச்சியில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்கிறார். அப்போது, அமெரிக்காவில் வாழும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 8 வயது சிறுவன், சைபர் பாதுகாப்பு திறனை, இன்றைய தலைமுறையினர் வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து உரை நிகழ்த்த உள்ளான். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலிருந்து, அவன் நிகழ்த்த உள்ள உரை, வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஒளிபரப்பாக உள்ளது. சைபர் பாதுகாப்பு தொடர்பாக, ரூபன் உரை நிகழ்த்தும், நான்காவது மாநாடு இது. மற்றவர்களின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி, தகவல்களை திருடுவோரை தடுப்பது குறித்து, இளம் வயதினரிடையே, அவன் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளான். அத்துடன், எப்படி தகவல்கள் திருடப் படுகின்றன என்பதையும் விவரிக்க உள்ளான். இந்த மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்கின்றனர். ”ஒன்றரை ஆண்டுக்கு முன், கம்ப்யூட்டர் தொடர்பான விவரங்களை கற்றுக் கொண்டேன். தற்போது, என்னுடைய திட்டங்களை, நானே வடிவமைக்கிறேன்,” என, ரூபன் பால் தெரிவித்துள்ளான். தந்தை ஒடிசாவை சேர்ந்தவர்: இளம் வயதிலேயே, கம்ப்யூட்டர் மேதாவியாகி உள்ள சிறுவன் ரூபன் பாலின் தந்தை மனோ பால். ஒடிசாவில் பிறந்த மனோபால், 2000ம் ஆண்டில், அமெரிக்கா சென்று, அங்கு குடியேறினார். ஆகஸ்ட் மாதத்தில், கம்ப்யூட்டர் கேம்ஸ் நிறுவனம் ஒன்றை துவக்கிய ரூபன் பால், தற்போது, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளான். அவனின் தந்தை, நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்