‘ஆசிரியர்களின் சம்பள செலவு 9 ஆயிரம் கோடி’
தேனி: “பள்ளிக் கல்வித்துறைக்கான 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில், ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டும் 9,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது,” என, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். தேனி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி சீரமைப்பு மாநாடு தேனியில் நடந்தது. கலெக்டர் முத்துவீரன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் அறிக்கை வாசித்தார். கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘கடந்த ஆட்சியில் கல்வித்துறைக்கு 2,000 கோடி, 3,000 கோடி என்றுதான் நிதி ஒதுக்கினார்கள். கடந்த பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு வருவாயில் இது ஐந்தில் ஒரு பகுதி. கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் 10 ஆயிரம் கோடியில் 9,000 கோடி ரூபாய், ஆசிரியர்களாகிய உங்கள் சம்பளத்துக்கே செலவிடப்படுகிறது’, என்றார்.