உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான பொக்கிஷம் இணையதளம்

ஒரு விஷயத்தை எவ்வாறு, யாரிடம் அறிந்துகொள்வது என்று குழம்பிய காலம் போய், இணையம் இருக்கையில் கவலை எதற்கு? என்ற அளவில் நிலை மாறியுள்ளது. இணைய தளத்தில் அனைத்துமே கிடைக்கும் என்ற நிலையில், மாணவர் சமுதாயம் அதனால் பயன்பெறாமல் இருக்க முடியுமா? ஆனால் எவ்வளவோ அற்புத விஷயங்களைக் கொண்ட இணையம், மாணவர் சமுதாயத்தினால் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்றால், இல்லை என்றே கூறலாம். பெரும்பாலான மாணவர்கள் தேவையற்ற டேட்டிங், சாட்டிங் உள்ளிட்ட விஷயங்களுக்கு இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். வெறும், ஈ-மெயில் தொடர்புகளுக்காக இணையத்தை பயன்படுத்துபவர்களும் உண்டு. மேலும், ஆபாச தளங்கள் உள்ளிட்ட பல தேவையற்ற தளங்களுக்கு செல்வதோடு அல்லாமல், வீண் விளையாட்டுகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இணையதளம் உருப்படியாக பயன்படுத்தப்பட்டால், அதைவிட சிறந்த நன்மையை ஒரு மாணவர் தன் வாழ்வில் பெற முடியாது. பாடங்கள் தொடர்பான ஏராளமான விஷயங்களும், விளக்கங்களும் இணையதளத்தில் உள்ளன. எனவே மாணவர்கள் அதன்மூலம் பயன்பெறலாம். இணையத்தில் விரிவான பாட விஷயங்களை படிப்பதன் மூலமாக, பாடங்களைப் பற்றிய ஒரு பரந்த புரிதல் ஏற்படுகிறது. அதன்மீது ஒரு ஆர்வமும் ஏற்படுகிறது. அதேசமயம், இந்த விளக்கங்களை தேர்வில் பயன்படுத்துவது பற்றி உங்களின் ஆசிரியரிடம் விளக்கம் பெறலாம். இணையத்தில் பெறப்பட்ட சிறப்பு விளக்கங்களை தேர்வுத்தாளில் எழுதும்போது அதன் தரம் கூடுகிறது. வரலாறு மற்றும் அறிவியல் போன்ற பாடங்களுக்கு இணையத்தின் பயன்பாடு இன்றியமையாதது. பாடம் தொடர்பான விஷயங்களுக்கு மட்டும்தான் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. பாடம் தொடர்பற்ற ஏனைய பல விஷயங்களை (வரலாறு, சமூகம், அரசியல், புவியியல், இயற்பியல், விளையாட்டு, மருத்துவம், பொறியியல், வானியல், உளவியல் உள்ளிட்ட) விரிவாக படித்து ஆராய இணையம் மாபெரும் உதவி செய்கிறது. உங்களின் சகலகலா ஆசிரியராக இணையம் திகழ்கிறது. நீங்கள் சாட்டிங் செய்ய விரும்பினாலும், பிற மாணவர்களுடன் பாடம் தொடர்பாகவோ அல்லது ஏதேனும் ஆய்வு தொடர்பாகவோ விவாதிக்கலாம். சில பல்கலைகள், ஆன்லைன் நூலகங்களை வைத்துள்ளன. எனவே, இதன்மூலம் நீங்கள் செலவின்றி படிக்கலாம். மேலும், இணையதளங்களில், மாணவர் முன்னேற்றத்திற்கான பல ஆலோசனைகளும்(எ.கா - நினைவுத்திறனை மேம்படுத்தல், சிறப்பாக படித்தல், மனதை ஒருமுகப்படுத்தல்) கிடைக்கின்றன. உங்களின் இல்லத்தில் இணையம் இல்லையென்றாலும் பரவாயில்லை. ப்ரௌசிங் சென்டர் செல்ல தயங்க வேண்டாம். இணையத்தை இனிதே பயன்படுத்தும் மாணவர், நிச்சயம் ஒரு தலைசிறந்த மாணவர்!  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்