ஐ.ஐ.டி.,யில் ஆசிரியர் பற்றாக்குறை
இந்திய உயர்கல்வித் துறையில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. சமீபத்தில், பயிற்சி நிறுவனங்களால் ஐ.ஐ.டி.,யில் சேரும் மாணவர்களின் தரம் குறைந்து வருவதாக இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் டில்லி ஐ.ஐ.டி., இயக்குநராக பொறுப்பேற்ற சிவசங்கரன் கூறியதாவது: மாணவர்கள் ஆசிரியர் விகிதாச்சாரமான 10:1 என்பதை நிறைவு செய்ய, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் 2,500 ஆசிரியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யிலும் 30 சதவீத ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. டில்லி ஐ.ஐ.டி.,க்கு 800 ஆசிரியர்கள் தேவை. ஆனால் தற்போது 416 ஆசிரியர்களே உள்ளனர் என்றார். அதே போல ஐ.ஐ.டி., ரூர்க்கி இயக்குநராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரதீப்தா பானர்ஜி கூறும்போது, ரூர்க்கி ஐ.ஐ.டி.,யில் 900 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதில் பாதி அளவே தற்போது உள்ளனர். என்றார்.