கல்வி விழிப்புணர்வு பேரணி
சென்னை: அனைவருக்கும் கல்வி இயக்கம், புனிய தோமையார் மலை ஒன்றயத்தின் சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட பேரணியில், கல்வி அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து எஸ்.எஸ்.ஏ., வட்டார வள மைய மேற்பார்வையாளர் குணசேகரன் கூறுகையில்,‘ ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்து மாணவ, மாணவிகளைச் சேர்த்து வருகிறோம். இந்த ஆண்டு 463 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாற்று பள்ளி மூலம் கண்ணகி நகரில் 57 பேரும், பெருங்குடியில் 40 பேரும், திரிசூலத்தில் 21பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஓராண்டு கல்வி முடிந்தவுடன் சாதாரண பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்,’ என்றார். பேரணி முடிந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று சிறார்கள் பள்ளியில் சேர பெற்றோருடன் வந்திருந்தனர். அவர்களுக்கு உடனடி ‘அட்மிஷன்’ போடப்பட்டு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.