உள்ளூர் செய்திகள்

நிலவை நெருங்குகிறது சந்திரயான்!

பி.எஸ்.எல்.வி., - சி 11 ராக்கெட் மூலம் சந்திரயான் செயற்கைக்கோள் கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. முதலில் 255 கி.மீ., மற்றும் 22 ஆயிரத்து 860 கி.மீ., உயரத்திலான சுற்றுப் பாதையில் சுற்றவிடப்பட்ட சந்திரயான் செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு முறை சந்திரயான் செயற்கைக்கோளின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நவ. 4ம் தேதி ஐந்தாவது மற்றும் இறுதி முறையாக  செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை உயரத்தை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. காலை 4:56 மணிக்கு இப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, செயற்கைக்கோளில் உள்ள திரவ எரிபொருள் இன்ஜின் இரண்டரை நிமிடங்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம், நிலவின் சுற்றுப்பாதையை அடைவதற்கான, மூன்று லட்சத்து 80 ஆயிரம் கி.மீ., உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் சந்திரயான் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. சந்திரயான் செயற்கைக்கோள் வரும் 8ம் தேதி சந்திரனின் சுற்றுப்பாதையை அடையும். அப்போது, செயற்கைக்கோளில் உள்ள திரவ எரிபொருள் இன்ஜின் இயக்கப்பட்டு, சந்திரனின் சுற்றுப்பாதையில் சுற்ற விடப்படும். சந்திரயான் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையத்தாலும், பைலாலுவில் உள்ள டீப் சயின்ஸ் நெட்வொர்க் மையத்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது முதல் சந்திரயான் செயற்கைக்கோளில் உள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் திருப்திகரமாக இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மாதவன் நாயர் வேண்டுகோள்: “இஸ்ரோவில் பணிபுரிய போதிய அறிவியல் மனிதவளம் கிடைப்பதில்லை,” என அதன் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது:தற்போதும் அரசாங்க அமைப்புகளுக்கு திறமையான மனித வளத்தை பெறுவது கடினமான விஷயமாக உள்ளது. சந்திரயான் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள போதும், இஸ்ரோவில் பணிபுரிய போதிய அறிவியல் மனிதவளம் கிடைப்பதில்லை. அறிவியல் வல்லுனர்கள், பொறியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான ஊதிய விகிதத்தை கவர்ச்சிகரமாக மாற்ற வேண்டும். இஸ்ரோவின் ஐ.ஐ.எஸ்.டி., கல்வி நிறுவனம் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயல்கிறது. முதலாம் ஆண்டு முடிவடைந்து, இரண்டாவது பிரிவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டிலிருந்து சொந்த கட்டடத்தில் இக்கல்வி நிறுவனம் இயங்கவுள்ளது. மத்திய அரசு நடப்பாண்டில் இஸ்ரோவிற்கு 4,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. மிகவும் கடினமான காலங்களிலும் மத்திய அரசு இஸ்ரோவிற்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இவ்வாறு மாதவன் நாயர் கூறினார். சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், “சந்திரயான் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி கழகத்தில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகள் தாய்நாடு திரும்ப விரும்புகின்றனர். இஸ்ரோவில் உள்ள வாய்ப்புகள் குறித்து என்னிடம் கேட்டு வருகின்றனர். வெளிநாடுகளின் விண்வெளி அறிஞர்களும் இந்திய விண்வெளி திட்டங்களில் சேர்ந்து பணிபுரிய விரும்புகின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்