உள்ளூர் செய்திகள்

ஆர்வத்தை கடன் வாங்காதீர்கள்...

பெரிய நம்பிக்கையை கொடுக்கக்கூடிய வியாபாரமல்ல அது. ஆயினும், படிப்பிற்காக செலவழிக்கக்கூடிய நிலையில் குடும்பம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதால், தந்தைக்கு பாரமாக இருக்க அவன் விரும்பவில்லை. பெட்டிக் கடையில் பீடி, சிகரெட் விற்றுக் கொண்டிருந்தாலும், கால்குலஸபிம், டிரிக்கோணமிட்ரியும் அவன் மனதில் இருந்து மறையவில்லை. மனதின் மூலையில் ஒளிந்து கிடந்த கணித ஆர்வத்தின் காரணமாக, மூன்று ஆண்டுகள் கழித்து, அவன், தொலைதூரக் கல்வி முறையில் பட்டப் படிப்பில் சேர்ந்தான். அதிலும் அவனால் பெருமளவு மதிப்பெண்களைக் குவிக்க முடியவில்லை. குடும்ப வறுமை, தந்தையின் சிறியக் கடையை விரிவுபடுத்துவதைக் குறித்தே அவன் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. ஏதோ பேருக்கு தேர்ச்சிப் பெற்றான். ஆனாலும், எனக்கென்று விசேஷ திறமை இருக்கிறது என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தது. திருப்பம் அந்த ஆண்டுதான், தமிழக அரசு முதன்முதலாக கணினிப் பயன்பாடு, வணிக மேலாண்மை போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டப் படிப்பில்(எம்.சி.ஏ., எம்.பி.ஏ.,) சேர்வதற்கு, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஒரு நுழைவுத்தேர்வு முறையை(டான்செட்) அறிமுகம் செய்தது. பட்டப் படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாது, நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு, மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கை வெளியானது. சம்பத் அந்தத் தேர்வை எழுதினான். எம்.சி.ஏ., படிக்க இடம் கிடைத்தது. இன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் அவன் மென்பொருள் வல்லுநராக பணியாற்றுகிறான். ஒருமுறை இங்கிலாந்துக்கும் போய் வந்துவிட்டான். உண்மையான வலிமை இன்றைய இளைஞர்கள் பலருக்கு, குடும்பச் சூழ்நிலையே பெரிய தடைக்கல்லாக தெரிகிறது. பெற்றோருக்கு படிப்பறிவில்லாததால், தாங்கள் வாழ்வில் உயர வழியில்லாமல் போய்விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் நிலை இன்று நம் நாட்டில் இல்லாமல் இருக்கலாம். வசதி வாய்ப்புள்ளவர்கள், தனிப்பயிற்சிக்கு பணம், தொழிற்கல்வியில் சேர நன்கொடை என அள்ளிக் கொடுத்து ராஜநடை போடலாம். அதைப் பார்த்து நீங்கள் திகைத்துப்போய் நின்றுவிட்டால், வாய்ப்புகள் வரும்போது அவற்றைப் பயன்படுத்த இயலாது. சாதகமற்ற சூழ்நிலையினை உறுதியான மனதோடு கடந்துவர வேண்டும். அதுவே உண்மையான வலிமை. ஏக்கங்களையும், பொறாமையையும் தூக்கி சுமந்துகொண்டு அலைந்தால், அவை மனதை மட்டுமல்ல, உடல் நலத்தையும் பாதிக்கும். ஆகவே, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மாற்றத்திற்கான வழி ஏளனம், கடுஞ்சொற்கள் இவற்றைக் கடந்து வராத மனிதர்களே இல்லை எனலாம். உங்களை மட்டும்தான் அவமானம் துரத்துகிறது என்றெல்லாம் நினைத்துக் கொள்வது அறியாமை. எந்த ஓர் அலுவலகத்திலும் நீங்கள் சந்திக்கும் அதிகாரிகள் அத்தனை பேரும், வாழ்வில் பலவித தடைகளைத் தாண்டித்தான் அந்த நிலையை அடைந்திருப்பார்கள். விளக்கம் கேட்டால், ஒவ்வொருவரிடமும், கூறுவதற்கு பல்வேறு கதைகள் இருக்கும். இன்று, பெருமிதத்துடன் புன்னகைத்துக் கொண்டிருக்கும் அத்தனை முகங்களின் பின்பும், தழும்புகள் நிறைந்த மனம் இருக்கத்தான் செய்யும். இன்றைய உங்களின் குடும்ப சூழ்நிலை ஏழ்மையானதாக, குறைவான அந்தஸ்து கொண்டதாக இருக்கலாம். அதை மாற்ற ஒரு வழியுண்டு. அது கல்வி! ஆர்வம் பணத்தைக் கொட்டி, பிரமாண்டமான கட்டடங்களைக் கொண்டிருக்கும் கல்லூரிகளில், இடம் வாங்கி, பிள்ளைகளை, மருத்துவமோ, பொறியியலோ படிக்க சேர்ப்பதுதான் நல்ல பெற்றோருக்கு அழகு என்று நம்பிக் கொண்டிருக்காதீர்கள். எந்தப் படிப்பு என்றாலும், அதை ஊக்கமாகப் படித்தால், நிச்சயமாக நல்ல எதிர்காலம் உண்டு. அதைத்தான், ‘அகல உழுவதிலும் ஆழ உழுவது நல்லது‘ என்று கூறுகிறார்கள். உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகம்? அறிவியலா, கணிதமா, இலக்கியமா, பொருளாதாரமா - ஆர்வத்திற்கான அடிப்படை படிப்பை முடித்தால் போதும். அதன்பின், அந்த ஆர்வமே உங்களை உயரிய இடத்தில் கொண்டுபோய் சேர்க்கும். பகட்டான அலுவலகங்களையும், பரபரப்பான நகரங்களையும், நுனிநாக்கு ஆங்கிலத்தையும், வெற்று ஆடம்பரங்களையும் கண்டு, ஒருபோதும் திகைத்துப்போய் நின்று விடாதீர்கள். உண்மையான ஆர்வம் கொண்ட இளைஞனை இவை எதுவும் தடுக்க இயலாது. நம்பிக்கை விதை நம்பிக்கை, விதையாக, உங்களுக்குள் கிடக்கட்டும். விதை உடனே முளைப்பதில்லை. தன்மேல் மிதித்துச் செல்லும் கால்களை அது சபிப்பதில்லை. பெய்யாத மழைக்காக அது புலம்புவதில்லை. போடப்படாத உரத்திற்காக அது ஏங்குவதில்லை. தனக்காக, சமயம் வருமட்டும் அது காத்திருக்கிறது. தனக்குள் உயிரை அது காப்பாற்றி வைத்திருக்கிறது. மிதித்துச் செல்லும் மிருகங்களால், மனிதர்களால், அது இன்னும் நன்றாக பூமிக்குள் பதிந்து கொள்கிறது. பருவம் தப்பி மழைப் பெய்தாலும்கூட, அந்த தண்ணீரைக் கொண்டு, அது, தனக்குள் இருக்கும் உயிரை வெளிக்கொணர்கிறது. மெல்ல தளிர் விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வேர் விடுகிறது. யாருடைய உதவியுமின்றி பெரும் மரமாகிறது. அதுவே நாளடைவில், பல பறவைகளுக்கும் இருப்பிடமாக, மனிதருக்கு ஓய்விடமாக மாறி நிற்கிறது. புதிய பாதை உங்கள் ஆர்வம் எது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். இன்னொருவரிடமிருந்து, ஆர்வத்தை கடன் வாங்காதிருங்கள். இயற்கை, ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு ஆர்வத்தை, திறமையை விதைத்திருக்கிறது. அதை மற்றவர்கள் உணர இயலாது. சம்பத்தின் உள்ளே, கணிதம் என்ற ஆர்வம் இருந்தது. ஏற்ற சமயம் வரும் வரைக்கும், அந்த ஆர்வத் தீயை அவன் அணையாமல் வைத்திருந்தான். அவனுக்குள் அப்படி ஒரு ஆர்வம் இருப்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சூழ்நிலைகளைக் கண்டு அவன் திகைக்கவில்லை. அரசின் புதிய அறிவிப்பு ஒரு திருப்பமாக அவனுக்குப் பட்டது. தைரியமாக திரும்பினான். புதியதொரு பாதையைக் கண்டு கொண்டன். நம்பிக்கையோடு இருங்கள். சூழ்நிலைகளைக் கண்டு திகைத்துப்போய் நிற்காதீர்கள். உங்களுக்குள் இருக்கும் ஆர்வம் அணைந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திருப்பங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்! - டேவி. சாம் ஆசிர்dsamasir@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்