மாணவர்களுக்கு படைப்பாற்றல் போட்டி
திருப்பூர்: பள்ளி மாணவ, மாணவியருக்கு, பாலஸ்ரீ விருதுக்கான படைப்பாற்றல் போட்டி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், வரும், 12ல் நடைபெறுகிறது.தமிழக அரசு கலை பண்பாட்டு துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், 2015-16ம் ஆண்டுக்கான, பாலஸ்ரீ விருது படைப்பாற்றல் போட்டி நடத்தப்படுகிறது. தாள வாத்தியம், குரலிசை, நாட்டியம், நாடகம், பொம்மலாட்டம், வரைகலை, ஓவியம், சிற்பம், கதை, கவிதை, கட்டுரை, உரையாடல், அறிவியல் செய்முறை திட்டம் உட்பட, 16 வகையான படைப்பாற்றல் போட்டி, மாணவ - மாணவியருக்கு நடத்தப்படுகிறது. இதில், 10 முதல், 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். போட்டிகளில் முதலிடம் பெறும், 16 பேர், சிறப்பு தேர்வாக மாற்றுத்திறனாளி மாணவர்கள், நான்கு பேர் என, மொத்தம், 20 பேர், தேர்வு செய்யப்படுவர். வரும், 9ல், திருப்பூர், தாராபுரம், காங்கயம் மற்றும் உடுமலை ஆகிய நான்கு மையங்களில், அப்பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான போட்டி நடத்தப்படுகிறது. முதலிடம் பெறுவோருக்கு, வரும், 12ல், மாவட்ட அளவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், போட்டி நடத்தப்படும். முதலிடம் பெறும் மாணவ, மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தென்னிந்திய அளவில், பெங்களூருவில் நடக்கும் பாலஸ்ரீ விருதுக்கான போட்டியில் பங்கேற்பர்.