ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை நிறைவு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை நிறைவு பயிற்சி முகாம் நடந்தது. பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (பொ) நடராஜ் தலைமை வகித்தார். என்.ஐ.ஏ., பள்ளி நிர்வாக அலுவலர் சின்னசாமி, பயிற்சி ஒருங்கிணைப்பாளரான கஞ்சம்பட்டி பள்ளி தலைமையாசிரியர் வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தனர். மாநில கருத்தாளர் தாஜூதீன், கருத்தாளர்கள் விஜயலட்சுமி, தங்கம் பயிற்சியினை அளித்தனர். முகாமில், ஆசிரியர்கள் கற்பிக்கும் திறன் மேம்பாடு, மாணவர் அணுகுமுறை, ஆசிரியர்கள் திற மதிப்பீடு பயிற்சி, மாணவர் கற்றல் அடைவு திறன், மாணவர் சார்ந்த வகுப்புமுறை, பாட முறை செயல்பாடுகள் குறித்த பயிற்சி மற்றும் நவீன தொழில்நுட்ப முறையில் மாணவர்கள் தன்னிறைவு பெறுதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.