நோடல் அதிகாரிகள் நியமனம்
புதுடில்லி: ஓ.என்.டி.சி., என்றழைக்கப்படும், அரசின் பொது டிஜிட்டல் வர்த்தக தளத்தில், தொழில்முனைவோர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளர்கள் ஆகியோர் இணைவதை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும், நோடல் அதிகாரிகளை நியமித்துள்ளது.சிறிய சில்லரை விற்பனையாளர்கள், தங்கள் பொருட்களை, நாடெங்கும் உள்ள வாடிக்கையாளர்களிடம் விற்கவும், வாங்குபவர், எந்த ஒரு தளத்தில் விற்கப்படும் பொருட்களை வாங்கவும், இந்த ஓ.என்.டி.சி., தளம் உதவும்.இதுகுறித்து, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூட்டு செயலர், சஞ்சீவ் கூறியதாவது:தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளர்கள் ஆகியோர் இதில் பயன் அடைய, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நோடல் அதிகாரிகள் சிறப்பு திட்டங்களை நடத்த உள்ளனர். மேலும், ஓ.என்.டி.சி., குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உள்ளூர் வணிகங்களை அதில் இணைக்கவும் உதவுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.