தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடி
சென்னை: தொழில்நுட்ப துறையில் இந்தியா முன்னோடியாக உள்ளது என மத்திய மின்னணுவியல் துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார்.இந்திய மின்னணுவியல் எதிர்காலம் என்ற தலைப்பில், சென்னை ஐ.ஐ.டி.,யில், ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. கல்வியாளர்கள், தொழில் வல்லுனர்களின் கலந்துரையாடல், சிறப்பு முதலீட்டாளர்கள் சந்திப்பு உள்ளிட்டவை கருத்தரங்கில் இடம் பெற்றன. ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தலைமையில் நடந்த நிகழ்வில், மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக, ஆன்லைன் வழியில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை, தொழில்நுட்பத்துக்கான சர்வதேச சந்தையில், இந்தியா வாடிக்கையாளராக இருந்தது. தற்போது தொழில்நுட்பம், செமி கண்டக்டர் தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவற்றில் முன்னோடியாக உள்ளோம். இதில், சென்னை ஐ.ஐ.டி., வேகமாக வளரும் நிறுவனமாக உள்ளது. இந்த வாய்ப்பை, &'ஸ்டார்ட் அப்&' என்ற துவக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு ராஜிவ் சந்திரசேகர் பேசினார்.