உள்ளூர் செய்திகள்

கல்விக் கடன் தள்ளுபடி

கடலுார்: ரயில் விபத்தில் இறந்த மகனின் மருத்துவ படிப்பிற்கு பெற்ற கல்விக் கடன் நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய வங்கிக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.கடலுார் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் குமார் 60. இவர் தனது மகன் சித்தார்த் என்பவரின் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு கடந்த 2016ம் ஆண்டு 21 லட்சம் ரூபாயை அதே பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கல்வி கடன் பெற்றார். கடன் விண்ணப்பித்த தேதியில், ஐபி வித்யார்த்தி சுரக் ஷா பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகையை வழங்குவதாக வங்கி உறுதியளித்தது.இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ், எந்தவொரு காரணத்திற்காகவும் காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர் இறந்தால், இறந்த தேதியில் இருந்து கடன் தொகையை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். குமார் மற்றும் சித்தார்த் கடன் தவணையை தவறாமல் கட்டி வந்த நிலையில் 2022ம் ஆண்டு ரயில் விபத்தில் சித்தார்த் இறந்து விட்டார். இது குறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்து நிலுவை தவணை தொகை உட்பட கடன் கணக்கை முன்கூட்டியே முடிக்குமாறு குமார் கோரியுள்ளார்.ஆனால், கல்வி கடனை எந்தவொரு காப்பீட்டு கொள்கையிலும் ஈடுசெய்ய முடியாது என்று கோரிக்கையை வங்கி நிராகரித்து விட்டது. இதையடுத்து நிலுவை கடன் தவணை தொகையை தள்ளுபடி செய்ய வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என கடலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஆணைய தலைவர் கோபிநாத் உறுப்பினர்கள் பார்த்திபன் கலையரசி ஆகியோர் கடன் நிலுவை தவணை தொகையை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டும்.சேவை குறைபாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு குமாருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் வழக்கு செலவு தொகை 5,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டனர். மேலும், மனுதாரின் கிரெடிட் ஸ்கோர் ரேட்டிங் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வங்கிக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்