விருதுநகர் புத்தகத்திருவிழா கோலாகலம்
விருதுநகர்: எனது நுாலகமே எனக்கு போதிய பெரும் செல்வம், என்கிறார் ஆங்கில கவிஞர் சேக்ஸ்பியர். நான் படிக்காத ஒரு புத்தகத்தை கொடுக்கும் நபர் என் சிறந்த நண்பர், என ஆபிரகாம் லிங்கன் கூறுகிறார்.அப்படி என்னதான் இந்த புத்தகங்களில் உள்ளது. உள்ளத்தை மாற்றி, அறிவை கூராக்கும் சிந்தனைகள் உள்ளன. சமூகத்தை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு அழைத்து செல்லும் அச்சாணிகளாக புத்தகங்கள் உள்ளன. ஒரு விஷயத்தை தெரியாததால் உயர்வானது என்று கடந்து செல்வதோ, அது புரியவில்லை என்பதால் தாழ்வானது என விட்டு செல்லும் பழக்கத்தை புத்தகங்கள் உருவாக்குவதில்லை.இளம் வயதிலே புத்தகங்களை படிக்க துவங்கும் போது திறந்த மனதுடன் கல்வி கற்பது துவங்குகிறது. அது மிக எளிமையான விஷயம் இல்லை என இன்றைய கல்வியாளர்கள் பலர் கூறுகின்றனர். திறந்து மனதுடன் கற்க புத்தகங்கள் உதவுகின்றன. ஆகவே சிறு வயதில் இருந்தே புத்தகங்களை படிக்க கொடுங்கள் என்கின்றனர்.இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த புத்தகங்களை புதியதாக வருவோருக்கு அறிமுகப்படுத்தவும், அறிமுகமானவர்கள் இன்னும் நெருக்கமாகி உறவாடவும் விருதுநகர் மதுரை ரோடு கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நவ. 27 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், அரசியல், மருத்துவம், பொது அறிவு, சமையல், குழந்தைகளுக்கான புத்தகங்கள், போட்டி தேர்வு புத்தகங்கள் அதிகம் உள்ளன. இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம். சிறுவர்களுக்கான முப்பரிமாண அரங்கம், விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. பாரம்பரிய இசை கருவிகளின் கண்காட்சி நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், 6:00 மணிக்கு மேல் சிறப்பு பேச்சாளர்களும் பேசுகின்றனர். பபாசி, மாவட்ட நிர்வாகம், பொது நுாலகத்துறை இணைந்து ஏற்பாடுகளை செய்கிறது.