பள்ளிக்கல்வி இணையதளம் முடக்கம்
சென்னை: பள்ளிக்கல்வி இணையதளத்தின், சர்வர் கட்டணத்தை, உரிய காலத்தில் செலுத்தாததால், இணையதள செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறைக்காக, 2018ல் புதிய இணையதளம் துவங்கப்பட்டது. அதன்பின், தி.மு.க., ஆட்சி வந்ததும், https://tnschools.gov.in/ என்ற பெயரில், இன்னொரு இணையதளம் துவங்கப்பட்டது.செய்திக்குறிப்புகள், அரசாணைகள், அறிவிப்புகள், இந்த இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த இணையதளம் சில வாரங்களாக செயல்பாடின்றி முடங்கி உள்ளது. அதனால், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர், அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.இதுகுறித்து, அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இணையதளத்தின், சர்வர், டொமைன் கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாமல் விட்டதாலும், இணையதள பராமரிப்பு நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டதாலும், இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.