மீண்டும் பள்ளிக்கு போகலாம்...!
கொலகொலயா முந்திரிக்கா... நரிய நரிய சுத்தி வா...!கிராமங்களில் இந்த சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அப்பச்சி, அம்மச்சி வீட்டுக்கு சென்ற குழந்தைகள், பாரம் நிறைந்த மனதோடு, தங்கள் வீட்டுக்கு திரும்பி வருகின்றனர்.விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறதே... அதனால் தான் இவையெல்லாம். என்னங்க... பாப்பாவுக்கு யூனிபார்ம் தைக்க கொடுத்தோமே, வாங்கிட்டு வந்துட்டீங்களா.. என்று மனைவி கேட்க, 'வீட்டுக்கு வந்த பின்னாடி தான் அதை நியாபகப்படுத்துவியா..' என்ற பதிலுடன், செல்ல சண்டைகள் ஏராளம்.என்னடா... மழை வந்தா, ஸ்கூல் திறக்கறத தள்ளி வெச்சிருவாங்கல்ல... என்று நண்பனிடம் மகன் கேட்க, ரொம்ப வெயிலு அடிக்கறதனாலதான் இப்ப தள்ளி வச்சிருக்காங்கடா என்று மறுபக்கமிருந்து ரகளையாக பதில் வந்து விழுகிறது.என்னதான், புத்தகப் பை, யூனிபார்ம் நன்றாக இருந்தாலும், பள்ளி திறக்கும் போது புதிதாய் அணிய வேண்டும் என்ற ஆவல், குழந்தைகளிடம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கேற்ப குழந்தைகள், மாணவ, மாணவியருக்கு தேவையான கல்வி உபகரணங்களின் விற்பனை, கடைகளில் களைகட்டி வருகிறது.தையல்காரர்கள் விடிய, விடிய சீருடைகளை தைத்து தள்ளுகிறார்கள். ஆபீஸ் முடிந்து வந்தவுடன், அப்பாக்களை நோட்டு புத்தகம் அட்டைப்போட்டு லேபிள் ஒட்டும் வேலை தொற்றிக்கொண்டுள்ளது.ஆக...மீண்டும் துவங்கப்போகிறது இன்னுமொரு பள்ளிக்காலம்!