ஆடியோ புத்தகங்களுக்கு வரவேற்பு
இந்தியாவில் ஆடியோ புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு உருவாகி வருவதாக தனியார் ஆடியோ புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டே இவற்றை கேட்க முடியும். உதாரணமாக அதிகாலையில் நடைபயணம் செய்துகொண்டே இவற்றை கேட்கலாம். மனதில் எளிதாக பதிவாகும் தன்மை கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. புத்தகங்களை வாசிப்பதை விரும்பாதவர்களும் இதன்மூலம் பயனடைய முடியும். இவை பேப்பர், மை போன்ற சாதனங்களின்றி தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது. இசை, நாடகம் என அவரவர் விரும்பும் வடிவில் தயாரிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக கிடைக்கும் இபுத்தகங்களை விட ஆடியோ புத்தகங்களே சிறந்தது என கல்வியாளர்கள் கூறுகின்றனர். சாதாரண புத்தகங்கள் மீது விற்பனை வரி விதிப்பதில்லை. ஆடியோ புத்தகங்கள் மீதான விற்பனை வரியை குறைத்தால் மக்கள் அதிகளவில் வாங்கி பயனடைய முடியும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஆன்லைன் மூலமாகவே ஆடியோ புத்தகங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு விற்பனையாளர்களும் இந்திய சந்தையை குறிவைக்க துவங்கி உள்ளனர்.