உள்ளூர் செய்திகள்

நீங்கள் விமானியாக வேண்டுமா?

பயணம் செய்யும் மொத்த பயணிகளின் விலைமதிப்பற்ற உயிரோடு சேர்த்து, அதிக விலைமதிப்புள்ள விமானத்தையும் காப்பாற்றும் முக்கிய கடமை விமானியினுடையது. விமானத்தை கிளப்பி மேலேற்றியதிலிருந்து, அதை பத்திரமாக கீழிறக்குவது வரை, விமானி மிகமிக கவனமாக இருக்க வேண்டும். நெருக்கடியான சந்தர்ப்பங்களை சமாளிக்கும் விதமாக, ஒரு விமானி உடல்ரீதியாக தயாரானவராகவும், மனரீதியாக விழிப்புணர்வு உள்ளவராகவும் இருக்க வேண்டும். விமானிகள் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள். வர்த்தகரீதியான விமானி, ராணுவ விமானி மற்றும் வான்வெளி விமானி என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். ஒரு வர்த்தகரீதியான விமானி, தனது தொழிலை மேற்கொள்ள, விமான போக்குவரத்து துறையின் தலைமை இயக்குனரால்(டைரக்டர் ஜெனரல் சிவில் ஏவியேஷன்-டி.ஜி.சி.ஏ) வழங்கப்படும் உரிமத்தை(லைசன்ஸ்) கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். இந்த உரிமத்தை 3 வழிகளில் பெறலாம். முதல் வழியாக மாணவர் பைலட் உரிமத்தை(எஸ்.பி.எல்), ப்ளையிங் கிளப்பிடமிருந்து பெற வேண்டும். அதை பெற்றபிறகு, பிரைவேட் பைலட் லைசன்ஸ்(பி.பி.எல்) மற்றும் கமர்ஷியல் பைலட் லைசன்ஸ்(சி.பி.எல்) என்ற 2 விதமான லைசன்ஸ் வாய்ப்புகள் இருக்கும். பி.பி.எல். என்பது பொழுதுபோக்கிற்காக விமானம் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் சி.பி.எல். என்பது முழுநேர விமானி வேலையை விரும்புபவர்களுக்கு வழங்கப்படுவது. எனவே உங்களுக்கு எது தேவை என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். விமானிகளுக்கான வேலைவாய்ப்பானது, சர்வதேச அளவில் தனியார்துறை, பொதுத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் அதிகளவில் உள்ளன. பைலட்டுகளுக்கான சம்பளம் அனைவரும் விரும்பும் வகையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்