உள்ளூர் செய்திகள்

அமெரிக்க எச் 1 - பி விசா விண்ணப்பம்: தேர்வு விகிதம் 75 சதவீதம் வரை உயர்வு

வாஷிங்டன்: அமெரிக்காவின், 'எச் 1 - பி' விசாவுக்கு, 90 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து விண்ணப்ப அளவு கணிசமாக குறைந்ததால், விசாவுக்கு தேர்வாகும் விகிதம், 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.அமெரிக்காவில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த பணிகளில் வெளிநாட்டினரை பணியமர்த்த, 'எச் 1 - பி' விசா கட்டாயம். ஆண்டுக்கு, 85,000 விசாக்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கான விதிகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு மாற்றினார்.அதன்படி, 90 லட்சம் ரூபாயாக விசா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பொதுவான லாட்டரி முறை மாற்றப்பட்டு, உயர் ஊதிய பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு லாட்டரி முறையில் நான்கு வாய்ப்புகள் என்ற விதி கொண்டு வரப்பட்டது. கட்டணம் தொடர்பான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.அதிபர் டிரம்பின் இந்த முடிவு, அமெரிக்காவில் பணியாற்ற விரும்பிய நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.இது போன்ற கட்டுப்பாடுகளால் அமெரிக்க நிறுவனங்கள், 'எச் 1 - பி' விசாவுக்கு நிதி அளிப்பதை குறைத்தன. வழக்கமாக, 'எச் 1 - பி' விசாவுக்கு ஆண்டுக்கு, 7 லட்சம் விண்ணப்பங்கள் குவியும் நிலையில், இந்த ஆண்டு, 2.35 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.இந்நிலையில், 'எச் 1 - பி' விசா விண்ணப்பதாரர்களின் லாட்டரி முறையிலான தேர்வு விகிதம் இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. முன், 33 சதவீதமாக இருந்த தேர்வு வாய்ப்பு, இப்போது, 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.அமெரிக்க ஐ.டி., நிறுவனங்கள் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து, மூத்த பணியாளர்களை மட்டுமே பணியமர்த்தும் நிலைக்கு மாறியுள்ளன. இது நம் நாட்டு இளம் பொறியாளர்களுக்கு சவாலாக இருந்தாலும், உயர் திறன் கொண்டவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்