உள்ளூர் செய்திகள்

நாளை குரூப் 2 தேர்வு: 6.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: குரூப் 2 போட்டி தேர்வு நாளை 1,620 மையங்களில் நடக்கிறது. தமிழக அரசின் பல துறைகளில், உதவியாளர் பணியில் 2,846 காலி இடங்களை நிரப்ப குரூப் 2 போட்டி தேர்வு நாளை காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. இது குறித்து அந்த வட்டாரம் மேலும் தெரிவித்ததாவது: தேர்வை 6,32,672 பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 1,620 மையங்களில் 2,217 தேர்வு அறைகளில் தேர்வு நடக்கிறது. சென்னையில் 202 மையங்களில் 231 அறைகளில் தேர்வு நடக்கிறது. 71,498 பேர் சென்னையில் தேர்வெழுதுகின்றனர். தேர்வு 300 மதிப்பெண்ணுக்கு அப்ஜக்டிவ் முறையில் நடக்கும். 200 கேள்விகளுக்கு தலா 1.5 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பணி என்பதால் இரண்டாவது தேர்வு எதுவும் கிடையாது. தேர்வை கண்காணிக்க 228 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். பதற்றம் நிறைந்த தேர்வு மையங்களில் வீடியோ பதிவு நடக்கும். தேர்வில், விண்ணப்பத்தாரர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு தேர்வாணைய வட்டாரம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்