உடுமலையில் பிளஸ் 2 தேர்வில் 90 சதவீதத்தை தாண்டும் அரசு பள்ளிகள் தேர்ச்சி
உடுமலை: உடுமலையில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும், 90க்கும் அதிகமான சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளன.உடுமலை கோட்டத்தில் மொத்தமாக, 17 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 5 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.கடந்தாண்டு முடிவுகளின் அடிப்படையில், ஒரு சில பள்ளிகள் இரண்டு சதவீத வித்தியாசங்களில் அதிகரித்தும், குறைந்தும் உள்ளன. ஆனால், அனைத்து பள்ளிகளும் 90க்கும் அதிகமான தேர்ச்சி சதவீதத்தை அடைந்துள்ளன.குறைந்தபட்சமாக, ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில், 92 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், 20 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 95 சதவீதத்திற்கும் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளன.அரசுப்பள்ளிகளின், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் என, பள்ளி நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அனைத்து அரசு பள்ளிகளிலும், நுாறு சதவீத இலக்கை நோக்கி தான் கல்வியாண்டு துவங்குகிறது. இதனால் தொடர்ந்து முன்னேற்றம் அடைகிறது. அரசுப்பள்ளிகளின் கல்வி நிலை தேர்ச்சி சதவீதத்தை கொண்டு பார்க்கலாம். உடுமலையில், அனைத்து பள்ளிகளும், 90க்கும் அதிகமான தேர்ச்சி சதவீதம் பெற்றிருப்பது சிறப்புதான். மாணவர் சேர்க்கை இதனால் அதிகரிக்க கூடுதல் வாய்ப்புள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.