உள்ளூர் செய்திகள்

இந்திய மனிதன் 2040ல் நிலவில் நடைபோடுவான்!

'இந்திய மனிதன், 2040ல் நிலவில் நடப்பான்,' என, திருவனந்தபுரம், 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் பேசினார். 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழின் வினாடி - வினா இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசளித்த, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் பேசியதாவது: என் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், மாணவர்கள் உடனான இந்த சந்திப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். பொதுவாக இளம் தலைமுறையினர், கடந்த தலைமுறையை விட மிகவும் வேகமானவர்கள். அதை, இந்த வினாடி - வினா விருது நிகழ்ச்சியில் நேரில் கண்டு மகிழ்ந்தேன்.'அப்ளிகேஷன்' என்பதை, 'ஆப்' ஆக சுருக்கி விட்டதைப் போலவே, அனைத்திலும் சுருக்கத்தை எதிர்பார்க்கும் தலைமுறையினர் தான், தற்போதைய பள்ளி மாணவர்கள். கடந்த, 40 ஆண்டுகளாக தொடர்ந்து, இஸ்ரோவில் பணி செய்கிறேன். ஆனால், தற்போதைய தலைமுறை நான்காண்டுகளுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதில்லை; அதற்கு அவசியமும் இல்லை. 1980 முதல், ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும், இளைஞர்களின் மனமும், செயல்பாடுகளும் மாறுவதை கண்டிருக்கிறேன். முன்புள்ள சூழலில், ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்றிருந்தது. பின், அது நிரந்தர வேலையாக இருக்க வேண்டும் என்றிருந்தது.அடுத்து, தான் படித்த அல்லது தனக்குப் பிடித்த வேலை வேண்டும் என்பதாக இருந்தது. தற்போது, தான் படித்த தனக்குப் பிடித்த இடத்திற்கும், நேரத்துக்கும் உகந்த வேலை கிடைக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மாறி இருக்கிறது. இதற்கு, பல துறைகளின் வளர்ச்சியும், அதுசார்ந்த கல்வியும் பரவலானது தான் காரணம். முன்பெல்லாம் ஒரு துறை வளர்ச்சியடைந்து, அடுத்தகட்டத்துக்கு நகர, குறைந்தது 10 ஆண்டுகளாகின. தற்போது, மூன்று ஆண்டுகளுக்குள் தொழில்நுட்ப வளர்ச்சியும், மாற்றமும் ஏற்பட்டு விடுகின்றன. மனித மூளையும், உடலும் பயன்படுத்த பயன்படுத்த மேம்படும். ஆனால், இயந்திரங்கள் அதிக பயன்பாட்டினால் தேய்மானமும், சோர்வும் அடையும்.அதை, மனித மூளையை போல மேம்படுத்துவதற்காகவே செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்களும், 'நானோ சிப்' அதிவேக இணையதள ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. விண்வெளி துறையை பொறுத்தவரை, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறைகள் மட்டுமல்லாமல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, மூலக்கூறு இயற்பியல், வேதிமாற்றங்கள், கணக்கியல், நிதியியல் உள்ளிட்ட, அனைத்து துறையினருக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. இஸ்ரோவை பொறுத்தவரை, விண்வெளி அரங்கத்தை அமைத்து, அங்கு அனைத்து விதமான சோதனைகளையும் நடத்தும் முயற்சியில் மும்முரமாக உள்ளது.அதே போல, அங்கு இந்தியர்களை அனுப்பி, பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவதற்கான ஆராய்ச்சிகளும், விண்கலம் அமைப்பதிலும் தீவிரமடைந்துள்ளன. வரும் 2040ல், விண்வெளி துறையில் புதிய சாதனைகளை படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய, பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். அதனால், 2040களில், இந்திய மனிதன் நிலவில் நடப்பான். மாணவர்கள், தாங்கள் விரும்பிய துறையில் முழு கவனத்துடன் படிக்க வேண்டும். மாணவ பருவத்திலேயே சமைப்பது, வாகனம் ஓட்டுவது, வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட அடிப்படை திறமைகளை இருபாலரும் கற்க வேண்டும்.காலை உணவை எதற்காகவும் தவிர்த்து, இளமையிலேயே உடல் நலக்குறைவை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. எதிர்கால உலகம், இந்தியாவை நோக்கி திரும்பும். அதற்கான முயற்சியில் அனைத்து துறைகளையும் மேம்படுத்தும் திட்டங்களை, பிரதமர் மோடி முடுக்கி விட்டுள்ளார். அதை நோக்கி செல்ல, இந்திய இளைஞர்கள் வேலை அளிப்போராக, நிறுவனங்களை துவக்குவோராக, தொழில் முனைவோராக மாற வேண்டும். அதற்கு, இந்த பட்டம் வினாடி - வினா போன்ற நிகழ்ச்சிகளை, மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்