பி.எட். கலந்தாய்வில் 240 பேர் சேர்ந்தனர்
பி.எட்., ஆசிரியர் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் நேற்று துவங்கியது. மாநிலக் கல்லூரி கல்வி இயக்குனர் உமாராணி துவக்கி வைத்தார். தமிழகத்தில், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள, 2,110 இடங்களுக்கு, ஒற்றை சாளர முறையிலான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள், மாற்று திறனாளி மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு கவுன்சிலிங் நடந்தது. இதில், 240 மாணவர்கள் பங்கேற்று, மதிப்பெண் அடிப்படையில் தாங்கள் விரும்பிய கல்லூரியை தேர்வு செய்தனர். கல்லூரியில் சேருவதற்கான உத்தரவுகளை, கல்லூரி கல்வி இயக்குனர் உமாராணி வழங்கினார். இரண்டாம் நாள் (வியாழக்கிழமை), ஆங்கிலம் மற்றும் வரலாறு பாட மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. கவுன்சிலிங்கிற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழ்நாடு பி.எட்., கவுன்சிலிங் செயலர் பரமேஸ்வரி செய்துள்ளார்.