உள்ளூர் செய்திகள்

கோவை அருகே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டங்கள்: ஆய்வு நடத்துமா அரசு?

கோவை: கோவை, சுல்தான்பேட்டை ஒன்றியம், அக்கநாயக்கன்பாளையத்தில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்த கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.கல்வட்டம் என்பது, பெருங்கற்கால ஈமச்சின்னங்கள். இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், இறந்தவர்களின் உடலை முதுமக்கள் தாழியில் வைத்து, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அக்காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த ஆபரணங்கள், ஆயுதங்கள் போன்றவற்றோடு புதைப்பர்.புதைக்கப்பட்ட இடத்தில் தரையின் மேற்பரப்பில் அடையாளத்திற்காகவும், அவர் நினைவாகவும் பெரிய கற்களை கொண்டு வட்ட வடிவ அமைப்பை உருவாக்குவர். இது 'கல்வட்டம்' என, அழைக்கப்படுகிறது.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கல்வட்டங்கள், கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. கல்வட்டங்களுக்கும், கல் திட்டைகளுக்கும் கட்டமைப்பு வேறுபாடு உண்டு. பலகை கற்களைக் கொண்டு, செவ்வக, சதுர வடிவில் வீடு போன்று உருவாக்கப்படுபவை கல்திட்டைகள்.கொங்கு மண்டலத்தில், கொடுமணல் பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல்வட்டங்கள், கல்திட்டைகள்; உடுமலையில் கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், கொங்கு பகுதியில் இதுவரை காணக்கிடைக்காத அளவில் பெரும் எண்ணிக்கையிலான கல்வட்டங்கள் சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை ஒன்றியம், வடவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அக்கநாயக்கன்பாளையத்தில் இருப்பதாக வரலாற்று ஆர்வலரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான நடராஜன், தினமலர் நாளிதழை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.தொல்லியல் எச்சங்கள்அக்கநாயக்கன்பாளையம் அருகில் குடியிருப்பு பகுதிகள் இல்லாத, விவசாய நிலங்களுக்கு மத்தியில், 56 ஏக்கர் பொட்டல் நிலப்பரப்பு, முழுமையான சுற்றுச்சுவருக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. இந்த இடத்தை, உள்ளூர்வாசிகள் 'கோப்பா கள்ளி மேடு' என அழைக்கின்றனர்.இந்த இடத்தை வாங்கினால் குடும்பத்துக்கே ராசியில்லை; துர்சம்பவங்கள் ஏற்படும். தொடர்ந்து கைமாறிக் கொண்டே இருக்கிறது என்றும், இப்பகுதியில் அமானுஷ்யம் நிலவுவதாகவும் இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.கரடுமுரடான, ஓடைக்கல் காடு, தனியாருக்கு சொந்தமான அந்த இடத்தில், ஆங்காங்கே ஏராளமான கல்வட்டங்கள் காணப்படுகின்றன. சற்று மேட்டுப்பாங்கான இடத்தில் இருப்பதிலேயே மிகப்பெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்ட கல்வட்டத்தை காண முடிந்தது. அங்கு, 60 - 80 கல்வட்டங்கள் உள்ளன.ஒவ்வொரு கல்வட்டமும் சராசரியாக, 18 அடி விட்டத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. உருண்டையான பெருங்கற்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே, பரவலாக ஏறக்குறைய மண் மூடிய நிலையில், ஏராளமான கல்வட்டங்கள் காணப்படுகின்றன.பெருங்கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட கல்வட்டங்கள் தவிர சிறு, சிறு வெங்கக்கல் மற்றும் குவார்ட்ஸ் ரக கற்கள் வட்டக் குவியலாக அமைக்கப்பட்ட கல்வட்டங்களும் காணப்படுகின்றன. இந்த கல்வட்டங்கள் சற்று பெரிதாக, 20 முதல் 30 அடி வரையிலான விட்டம் கொண்டவையாக உள்ளன. சில கல்வட்டங்கள் உருவம் சிதைந்து காணப்படுகின்றன.கல்வட்டங்களின் அருகே, சிதிலமடைந்த எலும்புகள், மண்டையோடுகள், பானை ஓடுகள் கிடக்கின்றன. நேர்த்தியான, வழவழப்பான மேற்பரப்பில் பளபளப்பாக வண்ணம் பூசப்பட்ட கருப்பு -சிவப்பு பானை ஓடுகள், இருபுறமும் கருப்பு நிறத்திலான பானை ஓடுகள், இருபுறமும் சிவப்பு நிறம் கொண்டவை, மெல்லிய, மிக தடிமனான என, பலவகைப்பட்ட பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன.புதையல் முயற்சி?சில கல்வட்டங்களின் அருகில், பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி நான்கு அடி ஆழம் வரை தோண்டப்பட்டிருக்கிறது. ஓரிரு கல்வட்டங்கள் இயந்திரத்தால் கலைத்து போடப்பட்ட அடையாளமும் தெரிகிறது. பல்வேறு தனியார் கைக்கு மாறியிருக்கும் இந்த இடம், யாரேனும் ஒருவரால் இங்கு புதையல் இருக்கக் கூடும் என்ற ஆர்வத்தால் தோண்டப்பட்டிருக்கக்கூடும்.தோராயமாக, 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டங்கள் என்றாலும், தொல்லியல் துறையினர் இந்த இடத்தை ஆய்வுக்கு உட்படுத்தினால், ஏராளமான வரலாற்று தகவல்கள் கிடைக்கக்கூடும். கல்வட்டங்களின் முக்கியத்துவம் அறியாதவர்கள் அவற்றை சிதைப்பதற்கு முன், பிற்கால ஆய்வுகளுக்காக இந்த இடத்தை பாதுகாக்க, அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓய்வு பெற்ற பேராசிரியர் நடராஜன் கூறியதாவது:கொங்கு பகுதியில் இவ்வளவு எண்ணிக்கையில் கல்வட்டங்கள் கிடைத்திருப்பது இங்கு தான் என நினைக்கிறேன். கொடுமணல், கீழடி போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இதுவும் இருக்கக்கூடும்.இதுவரை அக்கநாயக்கன்பாளையம் கல்வட்டங்கள் குறித்து, எந்தவொரு ஆய்வோ, அறிக்கையோ பதிவாகவில்லை. முதன்முறையாக நம் கள ஆய்வின் வாயிலாக, இப்போது தான் வெளி உலகிற்கு தெரிய வருகிறது.இவ்வளவு பெரிய கற்களை எப்படிக் கொண்டு வந்து சேர்த்தனர் என நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இங்குள்ள மிகப்பெரிய கல்வட்டம் இங்கு வாழ்ந்த இனக்குழுவின் தலைவனாக, மிக முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருக்கலாம்.இறந்தவர்களின் தகுதி நிலையை பொறுத்து, வட்டங்களின் அளவு மாறுபட வாய்ப்புள்ளது. வெங்கைக்கற்களை பயன்படுத்தி பெரிதாக அமைக்கப்பட்டுள்ள கல்வட்டம், தகுதி நிலையில் குறைந்தவர்களாகவோ அல்லது குடும்பத்துடன் ஒன்றுக்கு மேற்பட்டவர் புதைக்கப்பட்ட இடமாகவோ இருக்க வாய்ப்புள்ளது.இங்கு, மணிகள் சிலவும் கிடைத்திருக்கின்றன. சில பானை ஓடுகளில் கீறல்கள் தென்படுகின்றன. அவை எழுத்துகளாக இருக்கலாம். கோடாரி அமைப்பிலான கல் கிடைத்திருக்கிறது; கற்கால ஆயுதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த இடம் எப்படி தனியாருக்கு சொந்தமானது என, தெரியவில்லை. அரசு உடனடியாக மீட்டு, ஆய்வு செய்தால், கொங்கு பகுதியின் வரலாற்று தொன்மை வெளிவரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.நத்தமேடு- போர்க்களமா?வடவள்ளி ஊராட்சியில், சுடுகாடு அருகே நத்தமேடு என்ற இடம் இருக்கிறது. இங்கு, உருவத்தில் மிகச்சிறிய குள்ளப் பாண்டியர்கள் வாழ்ந்ததாக, செவி வழித் தகவல் உலவுகிறது. இங்கிருந்து, பழங்கால மக்கள் பயன்படுத்திய, சிறிய ஆட்டுக்கல் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சுற்றுவட்டாரத்தில் நத்தமேடு என்ற பெயரில் வேறொரு இடமும் இருக்கிறது. இந்த பகுதிகள் போர் நடந்த இடமாக இருக்கலாம் என, வழி வழியாக சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த இடத்தில் பழம்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு அரசு ஆய்வு செய்தால் தொல்லியல் சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் பேராசிரியர் நடராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்