மதுரையில் செப்., 28ல் ஸ்டார்ட் அப் திருவிழா
சென்னை: தமிழக அரசின், ஸ்டார்ட் அப் டி.என் நிறுவனம், புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு மற்றும் சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்குகிறது. இந்நிறுவனம், சென்னை மட்டுமின்றி; மாநிலம் முழுதும் புத்தொழில் நிறுவனங்கள் துவக்-குவதை ஊக்குவிக்க, புத்தொழில் சார்ந்த செயல்பாட்டாளர்கள் அனைவரையும், ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் வகையில், ஸ்டார்ட் அப் திருவிழா நடத்துகிறது.அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்டில், கோவையில் நடந்த ஸ்டார்ட் அப் திருவிழாவில், 22,000 பார்வையாளர்கள் பங்கேற்றனர். மேலும், 450 தொழில் நிறுவனங்களின் கண்காட்சி அரங்கங்கள் இடம்பெற்றன. அதில், 87 நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை அறிமுகம் செய்தன.இந்தாண்டு ஸ்டார்ட் அப் திருவிழா, மதுரையில் வரும் செப்., 28ம் தேதி நடத்தப்பட உள்ளதாக, ஸ்டார்ட் அப் டி.என்., அறிவித்து உள்ளது. இந்நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கு புத்தொழில் துவங்குவதற்கான ஆலோசனை, புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு தேவைப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் இணைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன.