ஒன்று முதல் 3ம் வகுப்புக்கு விடுமுறை துவக்கம்
பொள்ளாச்சி: ஒன்றாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வு முடிந்தததை அடுத்து நேற்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த 2ம் தேதி ஆண்டு இறுதி தேர்வு துவங்கியது. அதில், 4 முதல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது.அதன்படி, வரும், 10ம் தேதி நடத்த இருந்த அறிவியல் பாடத்தேர்வு, 22ம் தேதிக்கும், 12ம் தேதி நடத்த இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கும் மாற்றப்பட்டது. இடைப்பட்ட நாட்களில், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் குழப்பமான நிலை ஏற்பட்டது.இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல் கோடை விடுமுறை துவங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனைத்து தொடக்கப் பள்ளிக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:4 முதல் 8ம் வகுப்பு மாணவர்களை, தேர்வுக்கு ஆயத்தப்படும் வகையில், அவர்களை, வரும், 12-ம் தேதி வரை பள்ளிக்கு வரவழைக்கலாம். அதன்பின், 15 முதல் 19ம் தேதி வரை, ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உள்ளதால், அந்நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.மீண்டும், 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பங்கேற்கக் கூடிய வகையில் தெளிவாக எடுத்துச் சொல்லுதல் வேண்டும். ஆசிரியர்களை பொறுத்தமட்டில், 26ம் தேதி வரை, பணி நாட்களாக கருதப்படுகிறது.அவர்கள், இடைப்பட்ட நாட்களில், தேர்தல் பணிக்காக சென்றால் 'ஆன் டியூட்டி'யாக கருதலாம். அதேபோல, தேர்தல் பணி இல்லாத நாட்களில், பள்ளிக்கு வருகை புரிந்து, ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி, மாணவர்களுக்கான பிரமோஷன் என, வழக்கமான பணியை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.