மதுரை, திருச்சியில் ஸ்டார்ட் அப் வாய்ப்புகள் அதிகம்; எம்.எஸ்.எம்.இ., செயலர் தகவல்
சென்னை: திருச்சி, மதுரை மாவட்டங்களில், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் சார்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை துவக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.தமிழகம் முழுதும், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் சார்ந்த அனைவரையும் ஒரு தளத்தில் இணைக்கும் நோக்கில், தமிழக அரசின் 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம், மதுரையில் இரண்டு நாள் 'ஸ்டார்ட் அப்' திருவிழா நிகழ்ச்சியை நடத்தியது.அதில், சிறு தொழில் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது: தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், பல்வேறு சலுகைகள் அடங்கிய ஸ்டார்ட் அப் கொள்கை வெளியிடப்பட்டது.மாநிலம் முழுதும் பரவலான வளர்ச்சியைஏற்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம்.பல மண்டலங்களில் ஸ்டார்ட் அப் அலுவலகங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை மட்டுமின்றி, மதுரை, கன்னியாகுமரி, துாத்துக்குடி என, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டுவருகின்றன.வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அமைக்க, திருச்சி, மதுரை மண்டலங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.