அரை மதிப்பெண் 40 லட்சம் ரூபாய்க்குச் சமம்
திட்டக்குடி: தினமலர் மற்றும் கல்விமலர் சார்பில் திட்டக்குடியில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கருத்துரைகள் வழங்கி ஆசிரியர்கள் கூறியதாவது: ஏமப்பூர், அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஜெயபால்: இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற உணர்ந்து படிக்க வேண்டும். பாடம் 2,9 களில் 7 கேள்விகள் கேட்கப்படுவதால் அவற்றில் அதிக தயாரிப்பு தேவை. மேலும் 1,4,5,6,8, பாடங்களை நன்றாக படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பாடம் 2,7ல் அதிக தயாரிப்பும், கூடுதலாக 1,4,5,6,8 பாடங்களில் தயாரித்துக்கொள்ள வேண்டும். கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் பாரி: பிளஸ்2 பொதுத்தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் உங்களது வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியது. அரை மதிப்பெண் 40 லட்சம் ரூபாய்க்குச் சமம். அலட்சியம் கூடாது. உங்களது பெற்றோர் ரத்தம் சிந்தி படிக்க வைக்கின்றனர். தேர்வில் நீங்கள் சாதிக்கவில்லையெனில் சமுதாயம் உங்களை மதிக்காது. எழுதும் விடைகள் தெளிவாக இருக்க வேண்டும். விடைத்தாள் களில் நீலம் மற்றும் கருப்பு பேனாவை பயன்படுத்துங்கள். தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் தேர்விலும் சாதித்து வாழ்க்கையிலும் வெற்றிபெற முடியும். எழுசெம்பொன் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் அன்பழகன் (கணிதம்): பொறியியல் படிக்க செல்லும் மாணவர்களுக்கு கணிதம் மிக மிக முக்கியமாகும். கணித பாடத்தை அடிப்படையாக கொண்டுதான் கட் ஆப் மதிப்பெண் மேற்கொள்ளப்படும். கணிதத்தில் உள்ள 10 பாடங்களில் 9வது பாடத்தில் உள்ள 5 விதிகளை படித்தால் 5 மதிப்பெண் கண்டிப்பாக பெறலாம். தேர்வு எழுதி முடித்தவுடன் வினாத்தாட்களை மீண்டும் சரி பார்க்கும்போது தவறு என்று தெரிந்தால் உடனே அடிக்கக்கூடாது. சரியான விடையை எழுதிய பின்னரே தவறானதை அடிக்க வேண்டும். தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி விலங்கியல் ஆசிரியர் ராமமூர்த்தி: பாடத்திற்கு பின் உள்ள வினாக்களை நன்கு படிக்க வேண்டும். பாடங்களை வரிவரியாக படித்து பெயர்கள், ஆண்டுகள், போன்றவைகளை அடிக்கோடிட்டு படிக்க வேண்டும். 3 மதிப்பெண் வினாக்களுக்கு புக் மார்க் கேள்விகள் அனைத்தையும் படிக்க வேண்டும். பாடங்களிலுள்ள விதிகள், பணிகள், எண்ணிக்கையிலுள்ளவைகளை ஒன்றாக படித்தல் வேண்டும். 5 மதிப்பெண் வினாக்களுக்கு நோய்த்தடைக் காப்பியல் பாடத்திலிருந்து கட்டாய வினா கேட்கப்படும். 2,3, 4 பாடங்களை நன்றாக படிக்க வேண்டும். மனித உடற்செயலியல் பாடத்தை முதல்பாதி, இரண்டாவது பாதி என பிரித்து ஒருபாதியை நன்றாக படிக்க வேண்டும். பாடம் 5,6ல் உள்ள வினாக்களை நன்றாக படித்து எழுதிப்பார்க்க வேண்டும். பாடத்திலுள்ள படங்களை போட்டுப்பார்த்து பாகங்களை குறித்துப் பார்க்க வேண்டும். திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாவரவியல் ஆசிரியர் ராஜா: பாடத்தில் முழு மதிப்பெண் எடுப்பதற்கு புத்தகத்தில் கொடுக்கப் பட்டுள்ள 135 வினாக்கள் தவிர பக்க வாரியாக உள்ள முக்கிய ஆசிரியர், நூல், கண்டுபிடிப்புகளை படிக்க வேண்டும். வேறுபாடுகள் குறித்த வினாக்களுக்கு மேற்தலைப்பிட்ட தலைப்புக்கேற்ப எழுதுகிறோமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மலர் வரைபடங்கள், செல்லியல், மரபியல் பாடத்தில் பெரும்பாலும் படம் சார்ந்த வினாக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. குரோமோசோம், வகைகள் மற்றும் உள்ளமைப்பியலில் இருவித்திலைத் தாவர இலையின் குறுக்குவெட்டுத்தோற்றம் அடிக்கடி கேட்கப்படுகிறது. கட்டாய வினாக்களில் ஹெர்பேரியம் முக்கியத்துவம், ஆக்குத்திசுவின் வகைகள், ஐ.சி.பி.என்.,முக்கியத்துவம் மற்றும் பசுங்கணிகத்தின் முக்கியத்துவம், குறிப்பு தொடர்ந்து கேட்கப்படுகிறது. உயிர்தொழில்நுட்பவியலில் உள்ள 4 விரிவான வினாக்களில் ஒரு வினா கண்டிப்பாக கேட்கப்படும். மூன்று மதிப்பெண் வினாக்களில் தேவையானவற்றிற்கு எடுத்துக்காட்டு தரவும். விழுப்புரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணினிஅறிவியல் ஆசிரியர் ராஜ்குமார்: அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. கணினி இன்றி எதுவும் இயங்காது என்ற நிலை மாறி வருகிறது. உங்களுக்கு படித்து முடித்த உடனே வேலை நிச்சயம். செய்முறை மற்றும் எழுத்து தேர்வை ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் செய்முறையில் எழுத்து தேர்வில் வரும் மதிப்பெண்களின் வினாக்களுக்கும் விடை உள்ளது. பெற்றோர்களை புரிந்துகொண்டு மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். டி.வி, மொபைலில் நேரத்தை செலவழிக்காமல் புத்தகத்தை மட்டும் படித்தாலே நிச்சயம். நல்ல மதிப்பெண் பெறலாம். விருத்தாசலம், பெரியார்நகர் வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆசிரியர் தேவேந்திரன்: நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் இந்த பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். நிறைய மதிப்பெண் பெற்றால் எதிர்காலத்தில் சாதிக்க வாய்ப்புள்ளது. 20 மதிப்பெண் வினாக்களுக்கு கடைசி நான்கு பாடங்களை நன்கு படிக்க வேண்டும். பகுதி அ மற்றும் ஆ வை சரியாக எழுதினாலே நிறைய மதிப்பெண்கள் பெறலாம். திட்டக்குடி, வதிஷ்டபுரம் பொருளியல் ஆசிரியர் குப்புசாமி: நீங்கள் தேர்வு செய்துள்ள குரூப் உங்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும். காலநேரத்தை விரயம் செய்யாமல் படிக்க வேண்டும். தேர்வு எழுதும்போதும் வினாக்களுக்கு நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும். தேவை விதி, நுகர்வுநோக்கு கோட்பாடு, அங்காடி அமைப்புகள், பணக்கொள்கை தலைப்புகளில் அதிக கவனம் செலுத்தி படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.