பிரிட்டனில் படிக்க 400 இந்தியர்களுக்கு கல்வி உதவித்தொகை
சென்னை: இந்தியாவில் நடப்பு ஆண்டில், பிரிட்டன் அரசின் செயல்பாடுகள் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிட்டன் துணைத் தூதரகத்தில் நேற்று நடந்தது. இதில் பிரிட்டன் தூதரகத்தின் துணைத் தூதர் பரத் ஜோஷி பேசியதாவது: இந்தியா, பிரிட்டன் அரசுகளின் கூட்டு முயற்சிகள் மூலம், இரு நாட்டு அரசுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன், ஒரு பகுதியாக, 2015ல் பிரிட்டனில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் படிக்க, இந்தியர்கள், 400 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல், 2013, 2014ல், 750 இந்தியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியுள்ளோம். தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும், ஐந்து ஆசிரியர்கள் மற்றும் 25 மாணவர்களுக்கு பிரிட்டன் அரசு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஆண்டில், பயிற்சி பெறும் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தொழில்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை புகுத்தும் வகையில், சினிமா தொழில்நுட்பம் சார்ந்த துறையில், 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம். இதனால், 500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்வதற்கான விசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் விண்ணப்பித்தவர்களில், 91 சதவீத பேருக்கு, விசா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.