மாணவனை காயப்படுத்தியதால் ரூ.50,000 இழப்பீடு தர முன்வந்த ஆசிரியை
சென்னை: மாணவனின் கன்னத்தில் குத்தி, காதை திருகிய ஆசிரியை, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர முன் வந்துள்ளார். இதையடுத்து, மாணவனின் தாயார் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்றத்தில் பைசல் செய்யப்பட்டது. சென்னை, மயிலாப்பூர் தனியார் பள்ளி ஒன்றில், ராமகவுரி என்பவர், ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சிகிச்சை: இதே பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனின் கன்னத்தில் நகத்தால் குத்தியதாகவும்; காதை பிடித்து திருகியதாகவும், அதனால் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக, ஆசிரியை ரமாகவுரி மீது மாணவனின் தாயார் மெகருன்னிசா புகார் அளித்தார். கடந்த 2007 மார்ச் மாதம், சம்பவம் நடந்தது. இதையடுத்து, ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், மாநில மனித உரிமை ஆணையத்தில், மெகருன்னிசா புகார் அளித்தார். அதை விசாரித்த ஆணையம், மனித உரிமை மீறலுக்காக, 1,000 ரூபாய் இழப்பீடு வழங்க, தனியார் பள்ளிக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை, ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியை ரமாகவுரி மனு தாக்கல் செய்தார். இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி, மெகருன்னிசாவும், மனு தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களும், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. ஆசிரியை சார்பில், வழக்கறிஞர் கே.ஆர்.ரமேஷ்குமார், மெகருன்னிசா சார்பில், வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி ஆஜராகினர். குற்ற நடவடிக்கை மனுக்களை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஆசிரியை மீதான புகாரில் பேரில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கடிதமும், ஆசிரியை அளித்துள்ளார். அதோடு நிற்காமல், ஆசிரியைக்கு எதிராக, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்ற நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அவர் சந்தித்து வருகிறார். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியுடன், இந்த பிரச்னைக்கு, சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, மாணவனின் பெயரில், 50 ஆயிரம் ரூபாயை ஆசிரியை ரமாகவுரி வழங்குவார். அதன்மூலம், இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். நிலுவையில் உள்ள வழக்கை, சமாதானமாக முடித்துக்கொள்ள, சைதை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை ஆசிரியை அணுக வேண்டும். மாணவனின் தாயார், சமரச நடவடிக்கைக்கு உதவ வேண்டும். ஆறு வாரங்களுக்குள், 50 ஆயிரம் ரூபாய்க்கான, டி.டி.,யை, இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் சமரசம் ஏற்பட்டதால், இத்துடன் பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.