உள்ளூர் செய்திகள்

படிக்க அசராத 69 வயது பாட்டி!

கோவை: வேளாண்மை பல்கலையின் தொலைதூரக்கல்வி மையத்தில் தொடர்ந்து நான்கு சான்றிதழ் படிப்புக்களை படித்து முடித்த 69 வயது பாட்டி, ஐந்தாவது சான்றிதழ் படிப்பில் சேர தனது பெயரை பதிவு செய்துள்ளார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் தொலைதூரக்கல்வி மையத்தில் விவசாயிகள், பெண்களுக்கு பயனுள்ள சான்றிதழ் படிப்புகள் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளை விவசாயிகள் பலர் படித்து வருகின்றனர். தற்போது இந்த படிப்புக்களை படிக்க, கோவையைச் சேர்ந்த பெண்களும் ஆர்வம் காட்டுகின்றனர். பேரூர் பச்சாப்பாளையம் பகுதியில் சவுந்தர்யம்- சந்தோஷம் இல்லத்தில் வசித்து வரும் 69 வயது பெண் கல்யாணி. வேளாண் பல்கலை தொலைதூரக்கல்வி மையத்தில் நடத்தி வரும் பேக்கரி பொருட்கள் தயாரித்தல், காய்கறி, பழங்களை பதப்படுத்துதல், அலங்கார தோட்டம் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் படிப்புக்களை படித்து முடித்து விட்டார். தற்போது  மூலிகைத்தோட்டம் என்ற படிப்பில் சேர, தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவர் பிரிட்டிஷ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசித்த போது 10க்கும் அதிகமான  குறுகிய கால சான்றிதழ் படிப்புக்களை படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாணி கூறியதாவது:அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் இருந்த போது பள்ளிகளில், தையற்கலை, கார் பழுதை நீக்குதல், வீடுகளை பராமரித்தல், கம்ப்யூட்டர் பயன்பாடு உட்பட பல்வேறு படிப்புகள் முதியோர்களுக்கு நடத்தப்படும். அதுபோல், முதியோர்களுக்கு இந்தியாவில் அதிகளவில் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுவது இல்லை. கோவையில் செட்டில் ஆனதும் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தொலைதூரக்கல்வி மையத்தில் நடத்தப்படும் சான்றிதழ் படிப்பில் சேர்ந்தேன். தற்போது நான்கு படிப்புக்களை முடித்துவிட்டேன். இந்த படிப்பில் இருந்து கற்ற விஷயங்களை, வீட்டுத்தோட்டத்தில் பயன்படுத்துகிறேன். இவ்வாறு கல்யாணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்