கிருஷ்ணம்மாள் கல்லூரியில் 738 பேருக்கு பட்டமளிப்பு
கோவை: பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா செப்., 4ம் தேதி நடந்தது. பல்கலை அளவில் ரேங்க் பெற்ற 40 மாணவியர் உட்பட மொத்தம் 738 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், சுகுணா கோழிப்பண்ணை நிறுவன நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் பேசியதாவது: சுதந்திரத்துக்குப்பின், இந்திய பொருளதாரக்கொள்கையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, தனியார் நிறுவனங்களுக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதுபோல் உலகம் முழுவதும் உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதால், சர்வதேச சந்தை எல்லோருக்கும் வாய்ப்பு அளித்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சரியான வர்த்தக முறையை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். பட்டப்படிப்பை முடித்த பின், அதிக சம்பளம் தரும் நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்யக்கூடாது. பணியில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளை, அனுபவம் தரும் ஆண்டாக எண்ணிக்கொள்ள வேண்டும். சவால்களைக் கண்டு பயப்படதேவையில்லை. சவாலை எதிர்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும். இவ்வாறு சவுந்தரராஜன் பேசினார். முன்னதாக கல்லூரி செயலாளர் நந்தினி ரங்கசாமி வரவேற்று பேசினார். முடிவில் கல்லூரி முதல்வர் யசோதா தேவி நன்றி கூறினார்.