உள்ளூர் செய்திகள்

விளம்பரத்துறையில் பிரகாசிக்க...

பொருளின் தேவை, தரம், பயன்பாடு, பெயர், நிறுவனத்தின் பெயர் போன்றவற்றை மக்கள் மனதில் பதிய வைக்க விளம்பரத்தின் துணை அவசியம். அதிலும் வலுவான போட்டி மிக்க இச்சூழலில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நிறுவனமும், விளம்பரத்தின் மீது அதீத கவனம் செலுத்துகின்றன. இன்னும் சொல்வதானால், விளம்பரத்தின் மீதான ஈர்ப்பே, பொருளின் மீதான தேவையையும், விற்பனையையும் தீர்மானிக்கிறது என்றும் கூட சொல்லலாம். அச்சு, ஒலி, ஒளி, இணையம் என அனைத்து வழி ஊடகங்களிலும் விளம்பரம் பிரதான இடம் வகிக்கிறது. சுவர் விளம்பரங்கள், பேனர்கள், துண்டுப்பிரசுரங்கள், தெரு நாடகங்கள் என இதர விளம்பரங்களும் உள்ளன. எவ்வகை விளம்பராக இருப்பினும் அவை நுகர்வோரை ஈர்ப்பதாக இருக்க வேண்டும்; அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். விளம்பரம் மற்ற துறைகளைப் போல் அல்ல. படைப்பாக்கத்திறனும், புதிய கோணங்களில் சிந்திக்கும் திறனும் அவசியம். விளம்பரத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. அக்கவுன்ட் டைரக்டர்,  க்ரியேட்டிவ், காப்பி ரைட்டர், மீடியா டிபார்ட்மென்ட், புரடக்ஷன் அண்டு ஸ்டுடியோ, நிர்வாகம், நிதி என பல்வேறு வகையான பணியிடங்கள் உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வர்த்தக சந்தையை ஆக்கிரமித்து இருக்கின்றன. இதன்காரணமாக, நுகர்வோருக்கு பல பிராண்டுகளில் இருந்து தங்களுக்குத் தேவையானயவற்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல வேலைவாய்ப்பும் ஏராளமாக அதிகரித்திருக்கிறது. விளம்பரங்கள் மூலமே பொருளை அறிமுகம் செய்ய வேண்டி இருப்பதால், விளம்பரத்துறையில் சாதிக்க அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளன. படைப்பாக்கத்திறன், வித்தியாசமாக அடையாளப்படுத்தும் முயற்சி, தனித்தன்மை, மொழியாளுமை, தனித்துவம், பொருளைப்பற்றிய முழுமையான தகவல், சமூக, கலாச்சார சூழல் பற்றிய அறிவு, கடும் உழைப்பு, பணிப்பளுவின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், குறிப்பிட்ட கெடுவுக்குள் பணியை முடித்துக் கொடுக்கும் திறன், மற்றவர்கள் கவனிக்காத பக்கத்தைக் கவனித்தல், கலந்துரையாடும் திறன் போன்றவை இத்துறையில் பிரகாசிக்கத் தேவையானவை. தயாரிப்பு நிறுவனத்துக்கும், மக்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படும் திறன் அவசியம். இத்தகு திறன்களை மேம்படுத்திக் கொள்ள, பல்வேறு கல்வி நிறுவனங்கள் விளம்பரத்துறையில் படிப்புகளை வழங்குகின்றன. படைப்பாக்கத்திறனும், சமயோசிதமாகச் செயல்படும் திறனும் இருந்தால், அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இத்துறையில் நிச்சயம் கோலோச்ச முடியும். இத்துறையை படித்தால் குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதம். உதாரணமாக ஒரு காப்பிரைட்டர் துவக்க காலத்தில் மாதம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் பெறலாம். இரண்டு, மூன்று ஆண்டு அனுபவத்தில் 25 ஆயிரம் முதல்ல 30 ஆயிரமும், நிபுணத்துவம் பெற்ற உடன் 1.5 லட்சம் ரூபாய் வரையும் ஊதியம் கிடைக்கும். தமிழகத்தில் இதுதொடர்பான படிப்பை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள்:(கல்வித்தகுதி பிளஸ் 2) *Bharathidasan University, Tiruchirappalli *Ethiraj College For Women, Chennai *PSG College of Arts and Science, Coimbatore *Vivekananda College, Tiruvekadam West 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்