எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து; அமெரிக்கா நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வாஷிங்டன்: எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அதிபர் டிரம்ப் உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.உலகம் முழுதும் இருந்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணி வழங்க, அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன. இதை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.விசா வழங்குவது உள்ளிட்ட குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்தாண்டு புதிய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, எச்-1பி விசாவுக்கான கட்டணம் , 2 லட்சம் ரூபாயில் இருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்களின் அரசுகள் சார்பில் நீதிமன்றத்தை நாடியது. வழக்கு விசாரணையின் போது பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி லியோ சொரோகின் பிறப்பித்த உத்தரவு:எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளார். அவருக்கு அத்தகைய அதிகாரத்தை பேரவை வழங்கவில்லை. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் அரசின் முடிவு சட்டவிரோதமானது. இதனால் இந்த அறிவிப்பு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இது அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.இதற்கிடையே அமெரிக்காவில் நடப்பாண்டில், 'எச்-1பி' விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 38.50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அந்நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.