இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு 15,409 மாணவ, மாணவியர் பங்கேற்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 15,409 மாணவ, மாணவியர் தேர்வெழுத உள்ளனர்.தமிழகம் முழுதும், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி துவங்கி தொடர்ந்து நடக்கின்றன. அதைத் தொடர்ந்து, இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்று பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், ஏற்கனவே, மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளிகள் வாயிலாக ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என, 124 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தேர்வெழுத உள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மொத்தம், 69 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15,409 பேர் அரசு பொதுத்தேர்வுகள் எழுத உள்ளனர்.இதில், 7,641 மாணவர்களும், 7,768 மாணவியரும் தேர்வெழுத உள்ளனர். 69 மையங்களுக்கும் தேர்வுத்துறை சார்பில் அதிகாரிகளும், பாதுகாப்பு பணிக்கு போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு மையங்களில் 105 பறக்கும்படை, 69 முதன்மை கண்காணிப்பாளர்கள் என, பல்வேறு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.