பிளஸ் 2 தேர்ச்சி விகித சரிவு: கலைப்பிரிவு மாணவர்கள் மீது தேவை கூடுதல் கவனம்
கோவை: மாவட்டத்தின் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இனி வரும் கல்வியாண்டுகளில். கலைப்பிரிவு மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2022ம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மாநில அளவில் நான்காவது இடத்தை கோவை தக்கவைத்தது. ஆனால், நடப்பாண்டு 96.66 சதவீதம் தேர்ச்சியுடன், மாநில அளவில் 13வது இடத்திற்கு தள்ளப்பட்டது.கற்றலில் பின்தங்கிய மாணவர்களை முறையாக கண்காணித்து, சிறப்பு கவனம் செலுத்தாது இதற்கு முக்கிய காரணமாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அந்த வகையில், கலை பிரிவில் குறைந்த தேர்ச்சி விகிதமும், மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் குறைவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.மாநில அளவில் பாடப்பிரிவு வாரியாக தேர்ச்சி விகிதம், அறிவியல் 96.90 சதவீதம், வணிகவியல் 92.67 சதவீதம் மற்றும் தொழிற்பாடம் 85.97 சதவீதமாக உள்ளது. மிகக்குறைவாக கலைப்பிரிவு தேர்ச்சி விகிதம், 85.19 சதவீதமாகும்.இதே போல, மாவட்டத்தில் அறிவியல், வணிகவியலை ஒப்பிடும் போது, கலைபிரிவின் முக்கிய பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 14,089 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், வணிகவியல் பாடத்தில் 346 மாணவர்களும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 150 மாணவர்களும் தோல்வியுற்றுள்ளனர். அதிகபட்சமாக பொருளதார பாடத்தை 14,220 மாணவர்கள் எழுதிய நிலையில், 392 மாணவர்கள் தோல்வியுற்றுள்ளனர்.கல்வியாளர்கள் கூறியதாவது:கலைப்பிரிவில் பாடங்கள் எளிதாக இருக்கும் என மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் போன்ற பாடங்களுக்கு ஆழமான புரிதல், தொடர்ந்து படிப்பது முக்கியம்.வழிகாட்ட வேண்டியது ஆசிரியர்கள் பொறுப்பு. சிறப்பு வகுப்புகள், பயிற்சிகள் மற்றும் தொடர் மாதிரி தேர்வுகளை நடத்தி மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும்.தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்குக் கூடுதல் பயிற்சி மற்றும் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.சி.ஏ., சட்டம், வங்கி, உளவியல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஊடகம், போட்டித் தேர்வுகள் போன்ற பல்வேறு துறைகளில் கலைப்பிரிவு மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இனிவரும் கல்வியாண்டில் கலை மற்றும் தொழிற்பிரிவு மாணவர்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்தினால், மாவட்ட தேர்ச்சி விகிதத்தை உயர்த்த முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.